இலக்கியத்திற்கு நொபெல் விருது வழங்கும் சுவீடன் நாட்டுக் குழுவினருடன், திருத்தந்தை பிரான்சிஸ் இலக்கியத்திற்கு நொபெல் விருது வழங்கும் சுவீடன் நாட்டுக் குழுவினருடன், திருத்தந்தை பிரான்சிஸ் 

சுவீடன் நொபெல் இலக்கிய விருதுக் குழு சந்திப்பு

1786ம் ஆண்டில், சுவீடன் நாட்டு அரசர் 3ம் குஸ்தாவோ அவர்களால் உருவாக்கப்பட்ட நொபெல் இலக்கிய விருது, 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அழைக்கப்பட்டுள்ள நாம், நம் சிறாரை உரையாடல் எனும் ஆயுதத்தோடு வளர்த்தெடுப்போம் என்றும், அதே கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நல்முயற்சிகளை மேற்கொள்ள, அவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நொபெல் விருதுக் குழு ஒன்றிடம் கூறினார்.

நவம்பர் 19, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் தன்னை சந்திக்க வந்திருந்த,  இலக்கியத்திற்கு நொபெல் விருது வழங்கும் சுவீடன் நாட்டுக் குழுவிடம் இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமகால கலாச்சாரத்தின் நிகழ்வுகளையும், போக்குகளையும் அறிந்து, மிகவும் மதிப்புமிக்க விருதை வழங்குகின்ற இந்த குழுவின் உறுப்பினர்களோடு சமுதாய உரையாடல்பற்றிய தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, சமுதாய உரையாடல், புதிய கலாச்சாரத்தை நோக்கிய பாதையில் ஈடுபடுவதற்கு மிகச் சாதகமான கருவியாகும் என்று கூறினார்.

இக்காலத்தின் சமூக ஊடகத்தின் அதீத வளர்ச்சி, பல நேரங்களில் உரையாடலை குழப்பநிலைக்கு இட்டுச்செல்லுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான சமுதாய உரையாடல் என்பது, நேர்மையோடும், ஏமாற்றுதலின்றியும் மற்றவரின் கருத்தை மதிக்கும் திறனை உள்ளடக்கியது என்றும் கூறினார்.

ஒவ்வொரு மனிதரும் தவிர்க்க இயலாத மனித மாண்பைக் கொண்டிருக்கின்றனர் என்ற உணர்வில் இடம்பெறும் சமுதாய உரையாடலை, மத நம்பிக்கையாளர், நம்பிக்கையற்றவர் என அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியத் திருத்தந்தை, உரையாடலில், அடிப்படையான உண்மைகளைப் பேணிக்காக்கும்போதே, அது மிகச் சிறப்பானதாக அமையும் என்றும் கூறினார்.

சுவீடன் நாட்டு அரசர் 3ம் குஸ்தாவோ அவர்களால் 1786ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நொபெல் இலக்கிய விருது, 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்குழுவில் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சுவீடன் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மொழியியல் நிபுணர்கள், இலக்கிய வல்லுனர்கள், வரலாற்று ஆசிரியர்கள் போன்றோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

டுவிட்டர் செய்தி

மேலும், நவம்பர் 19 இவ்வெள்ளியன்று இளையோரை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அன்புள்ள இளையோரே, நம் உலகம் விழித்தெழவேண்டுமெனில், உங்களது சக்தி, ஊக்கம், மற்றும், பேரார்வம் ஆகியவை தேவைப்படுகின்றன என்று பதிவுசெய்துள்ளார்.   

நவம்பர் 21, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, முதல் முறையாக, கத்தோலிக்கத் திருஅவையில், இளையோர் உலக நாளும், உலகின் அனைத்து மறைமாவட்டங்களில் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:27