இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் நினைவாக, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் நினைவாக, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் 

"ஆண்டவரின் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!"

கடந்த ஆண்டு இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் நவம்பர் 4, திருப்பலி நிறைவேற்றினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!" (புலம்பல் 3:26) என்று இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள், இறைவனில் முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவரின் இதயத்திலிருந்து, நம் ஒவ்வொருவருக்கும் விடப்படும் அழைப்பாக ஒலிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 4, இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், இவ்வாண்டு, அக்டோபர் மாத இறுதிவரை, அகில உலகத் திருஅவைக்கென பணியாற்றி, இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் நவம்பர் 4, இவ்வியாழன் காலை 11 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலியில், இவ்வாறு மறையுரையாற்றினார்.

ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு காத்திருப்பது

ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு காத்திருப்பது என்ற வாழ்வியல் பண்பு, ஒரு நாள் ஆர்வத்தில் எழுவது அல்ல, மாறாக, வாழ்நாள் முழுவதும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கமாக மாறவேண்டும் என்பதை, புலம்பல் நூலின் ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆண்டவர் அருளும் மீட்புக்காக காத்திருக்கும் வேளையில், நமக்குள் உருவாகும் போராட்டங்களை எதிர்கொண்டு, பல்வேறு சோதனைகளை வென்று, அமைதியுடன் அவருக்காக காத்திருப்பது, நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய உன்னத பண்பு என்பதை, திருத்தந்தை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

போராட்ட நேரங்களில் நம்பிக்கை

“என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!” (புலம்பல் 3:18) என்று இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கும் சொற்கள், போராட்ட நேரங்களில் நாம் ஒவ்வொருவரும் கூறும் சொற்களாக அமைகின்றன என்று, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளைகளில், நமது வலிமை, புகழ் அனைத்தும் மறைந்தாலும், ஆண்டவரில் நாம் கொள்ளும் நம்பிக்கை மறைந்துவிடக்கூடாது என்று எடுத்துரைத்தார்.

தன் துன்பங்கள் தன்னை ஆண்டவரிடம் அழைத்துச் சென்றது என்பதைக் கூற, புலம்பல் நூல் ஆசிரியர், "இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்" (புலம்பல் 3:21) என்று கூறியுள்ளதை, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, "ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!" (புலம்பல் 3:25) என்ற சொற்களையும் சுட்டிக்காட்டினார்.

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க...

மரணம் என்ற மறையுண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் இன்று, நம் வாழ்வில் உருவாகும் எதிர்ப்புகள், துன்பங்கள் ஆகியவற்றை தகுந்த கண்ணோட்டத்துடன் காணவும், அமைதியுடன் ஆண்டவருக்காகக் காத்திருக்கவும் இறைவனின் வரத்தை வேண்டுவோம் என்ற வேண்டுதலை, திருத்தந்தை தன் மறையுரையில் எழுப்பினார்.

கடந்த ஆண்டு மறைந்த கர்தினால்களையும், ஆயர்களையும் நினைவுகூரும் இவ்வேளையில், இவர்களில் சிலர், கோவிட்-19 பெருந்தொற்றினால் வேதனையுற்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரும், ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்' (மத்தேயு 25:34) என்ற அழைப்பை கேட்பார்களாக என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2021, 14:31