போரில் இறந்தோரின் கல்லறைகள் அமைதியின் செய்திக்காக..

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறந்த அனைத்து நம்பிக்கையாளரின் நினைவுநாளான, நவம்பர் 2, இச்செவ்வாய் காலையில் உரோம் நகரிலுள்ள, பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றி, போர்கள் மற்றும், வன்முறைகளுக்குப் பலியானோரின் ஆன்மாக்கள் நிறையமைதியடைய இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இந்தக் கதவு வழியாக நடந்துசெல்கின்றவர்கள், உங்களது காலடிகள் பற்றி நினைத்துப் பாருங்கள், உங்களது காலடிகள், இறுதிக் காலடி பற்றி நினைத்துப்பார்க்கும்' என்று இந்த சிறிய பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத்தோட்டத்தின் வாயில் கதவில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள், வாழ்க்கை ஒரு பயணம் என்பதை நினைவுபடுத்தின என்று, இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, நாம் அனைவருமே ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

கல்லறைகளை உற்றுப் பாருங்கள்

இந்தப் பயணத்தில் பல வரலாற்று நிகழ்வுகளையும், பல துன்பச் சூழல்களையும் நாம் கடக்கின்றோம், நாம் அனைவருமே இறுதிக் காலடி ஒன்றை வைத்திருக்கிறோம், நம் இவ்வுலகப் பயணத்தில் அதுவே கடைசிக் காலடியாக இருக்கும் என்றுரைத்த திருத்தந்தை, கல்லறைகளை உற்றுப்பாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.   

அந்தக் கல்லறைகளைச் சுட்டிக்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை, போரில் உயிரிழந்த இந்த நல்ல மக்கள், தங்களின் நாட்டையும், விழுமியங்களையும், கருத்தியல்களையும், சிலநேரங்களில் வருத்தப்படக்கூடிய அரசியல் சூழல்களையும் பாதுகாப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் எனவும் கூறினார்.

1914ம் ஆண்டில் உயிரிழந்த படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள, Redipugliaவிலுள்ள Anzio, Piave போன்ற இடங்களையும், தங்களுக்கு என்ன நேரிடும் என்பதுபற்றிக் கவலைப்படாமல், Normandy கடற்கரையில் போரிட்ட நாற்பதாயிரம் வீரர்களையும் நினைத்துப்பார்க்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இங்கு ஒரு கல்லறையில் பெயர் எழுதப்படாமல், “1944ம் ஆண்டில் பிரான்சுக்காக இறந்தவர்” என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தங்களின் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக, நன்மனத்தோடு போருக்குச் சென்ற இந்த படைவீரர்கள் எல்லாரும் இப்போது ஆண்டவரோடு இருக்கின்றனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதத் தொழிற்சாலையால், நாடுகளின் பொருளாதாரம் கட்டமைக்கப்படாமலிருக்க, போர்களே வேண்டாம் என போதுமான அளவு நாம் போராடுகிறோமா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

அமைதியின் செய்தியைக் கேட்பதற்காக அழுகுரல் எழுப்புகின்ற மற்றும், அமைதிபற்றிப் பேசுகின்ற, போரில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளை உற்றுநோக்குங்கள் என்று நம்பிக்கையாளர்களிடம் கூறியத் திருத்தந்தை, சகோதரர்களே, சகோதரிகளே, ஆயுதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை
பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை

பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டம்

உரோம் நகரிலுள்ள சிறிய பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் ஏறத்தாழ 1,900 கல்லறைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த மொராக்கோ மற்றும், அல்ஜீரிய நாடுகளின் படைவீரர்களின் கல்லறைகளே. இவற்றில் பெரும்பாலான கல்லறைகளில் முஸ்லிம்களின் பிறைகளும், சிலவற்றில் சிலுவைகளும் காணப்படுகின்றன. ஆயினும், அனைத்துக் கல்லறைகளிலும், “பிரான்ஸ் நாட்டுக்காக உயிரிழந்தவர்கள்” என்றே எழுதப்பட்டுள்ளன

நாத்சி படைகளுக்கு எதிராக, 1943 மற்றும், 1944ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் போரிட்டு இறந்த பிரெஞ்ச் படைவீரர்கள் நினைவாக, இக்கல்லறைத் தோட்டத்தை இத்தாலிய அரசு அமைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11ம் தேதி, இப்படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2021, 15:10