கிறிஸ்து பிறப்பு விழா பாடல்களை உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்வோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்து பிறப்பு விழா பாடல்களை உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்வோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண்போம்

திருத்தந்தை : சமுதாயப்பணியில் நம்மை முன்னிறுத்திச் செயல்பட, மன உறுதியும், படைப்பாற்றல் திறனும் முக்கியமானவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்பு விழா, மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்த பாடல்களை உருவாக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோர், மற்றும் அதில்  கலந்துகொள்வோரை இத்திங்கள் காலை வத்திக்கானில் சந்தித்து, தன் வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Gravissimum Educationis என்ற திருப்பீட அமைப்பும், Missioni Don Bosco Valdocco என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ள இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோரை, நவம்பர் 22, திங்கள் காலையில் சந்தித்த திருத்தந்தை, இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்குபெறும் இளையோர், மற்றும் இவ்விளையோருக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு குழுக்களுக்கு, தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

கிறிஸ்து பிறப்பு, மற்றும் அதன் மறையுண்மைக்கு நம்மை இட்டுச்செல்லும் திருவருகைக் காலத்தின் முகப்பில் இருக்கும் நாம், பெருந்தொற்றின் காரணமாக இக்கொண்டாட்டங்களின் ஒளி மங்கிப்போயிருந்தாலும், கருணை மற்றும் கனிவின் விழாவாக இருக்கும், கிறிஸ்து பிறப்பின் காலத்தில், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம், என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உறுதியான அன்பின் பல்வேறு செயல்பாடுகளைப் பகிர்வதில், கிறிஸ்துப் பிறப்பு விழா, தன் ஒளியைக் கொண்டுள்ளது என, இளையோரிடம் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே உணர்வுடன், திருஅவை, உடன்பிறந்த நிலையை உள்ளடக்கிய மனிதகுலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி வருகிறது என எடுத்துரைத்தார்.

சமுதாயப் பணியில் நம்மை முன்னிறுத்திச் செயல்பட, மன உறுதியும், படைப்பாற்றல் திறனும் முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென எழுதப்படும் பாடல்கள், மனிதகுல வளர்ச்சிக்கு உரமூட்டுவதாக, சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண உதவுவதாக இருக்கட்டும் என வாழ்த்தினார்.

இவ்வுலகின் செல்வங்கள் வெறுமையாக இருந்து, வெறுமையையே உருவாக்குகின்றன என்பதால், நம் பொதுவான இல்லமாகிய இவ்வுலகின் அனைத்துப் படைப்புக்களின், மற்றும் வரலாற்றின் அழகோடு இணைந்து, இறைவனின் மகிமையைப் புகழ்ந்து பாடுவோம் என்ற அழைப்பை விடுத்து, தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2021, 14:18