நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2021 செப்டம்பர் நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2021 செப்டம்பர் 

பாரிஸ் வார இதழுக்காக, திருத்தந்தை வழங்கிய நேர்காணல்

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வத்திக்கான் துறைகளில் மாற்றங்கள், பாலியல் முறையில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தும் அவலங்கள், தன் உடல்நலம் ஆகியவை குறித்து பேசியுள்ள திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரெஞ்சு நாட்டின் பாரிஸ் மாநகரில் இயங்கிவரும் Paris Match என்ற வார இதழுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு நேர்காணலில், கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வத்திக்கான் துறைகளில் மாற்றங்களை உருவாக்குவதில் சந்திக்கக்கூடிய சவால்கள், பாலியல் முறையில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தி இணையத்தில் வெளிவரும் அவலங்கள், மற்றும் தன் உடல் நலம் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

பெருந்தொற்றுக்கு எதிராக, வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் வழிநடத்தலுடன், உலகளாவிய திருஅவையினரோடு இணைந்து, சீரியப்பணிகளை ஆற்றிவருவது குறித்து, திருத்தந்தை, தன் மகிழ்வை வெளியிட்டார்.

திருத்தந்தையைத் தெரிவுசெய்ய, 2013ம் ஆண்டு கூடிவந்த கர்தினால்கள், வத்திக்கான் துறைகளில் மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்திக் கூறியதை, தன் பணிக்காலத்தில் ஏற்று நடத்திவருவதாகவும், இப்பணி, இன்னும் முழுமை அடையவில்லை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நேர்காணலில் கூறினார்.

மேலும், பிரெஞ்சு தலத்திருஅவையில், சிறியோர் பலர், பாலியல் முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்த கேள்வி எழுந்தபோது, அந்தத் தவறு, வேதனையும், வெட்கமும் தருவது என்பதை தெளிவுபடுத்திய திருத்தந்தை, இத்தகையக் கொடுமைகள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கும் அவலமான இணையதள வெளியீடுகளை, அரசுகள், இன்னும் கடுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறினார்.

'திருத்தந்தையே, தங்கள் நலம் எப்படி?' என்ற கேள்விக்கு விடையளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உடல்நலம் பெருமளவில் நலமாக உள்ளதென்றும், தான் முன்பு செயலாற்றிய அளவு தற்போது செயலாற்ற முடிகிறது என்றும் கூறினார்.

Paris Match என்ற வார இதழுக்காக திருத்தந்தை வழங்கிய இந்த நேர்காணல், 'ஏன் அவர்கள்' என்று பொருள்படும் "Pourquoi eux" என்ற நூலில், நவம்பர் 18, வருகிற வியாழனன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:22