இயேசுவின் புனித தெரேசா இயேசுவின் புனித தெரேசா 

இயேசுவின் புனித தெரேசா, பெண்குலத்தின் முதல் மறைவல்லுனர்

மெய்யியலாளர், மற்றும், இறையியலாளருமான அவிலா நகர் புனித தெரேசாவை, 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அவிலா நகர், இயேசுவின் புனித தெரேசா, கிராமப்புற பெண்கள் உலக நாள், மற்றும், உலக ஆயர்கள் மாமன்றம் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ளார்.

அவிலா நகர் புனித தெரேசா

இயேசுவின் புனித தெரேசா என்ற ஹாஷ்டாக்குடன் (#SaintTeresaofJesus) திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், ”இறைவேண்டல் என்பது, வியத்தகு காரியங்களை அனுபவிப்பது அல்ல, மாறாக, அது நம்மை கிறிஸ்துவோடு ஒன்றிணைப்பதாகும் என்று இயேசுவின் புனித தெரேசா நமக்குக் கற்றுத்தருகிறார். இந்த ஒன்றிப்பு உண்மையானது என்பதன் அடையாளங்களாக, பிறரன்புப் பணிகள் உள்ளன” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இஸ்பெயின் நாட்டின் அவிலா நகரில் 1515ம் ஆண்டில் பிறந்த இயேசுவின் புனித தெரேசா, மெய்யியலாளர், மற்றும், இறையியலாளர் ஆவார். இவர், கார்மேல் ஆழ்நிலை தியான துறவுசபையில் சேர்ந்து, அச்சபையில் துணிச்சலோடு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

1582ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்த இப்புனிதர்,  மிகவும் புகழ்பெற்ற The Interior Castle என்ற ஆன்மீக நூல் உட்பட பல கிறிஸ்தவ ஆன்மீக மற்றும் ஆழ்நிலை தியான நூல்களை எழுதியுள்ளார். 1970ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இப்புனிதரை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார். அவிலா நகர் புனித தெரேசா அவர்கள், திருஅவையில் மறைவல்லுனர் என அறிவிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.

மாமன்றம் பற்றிய டுவிட்டர் செய்தி

மேலும், 2023ம் ஆண்டு, அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலக அளவில் ஈராண்டு தயாரிப்புப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் துவக்கிவைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாமன்றம் பற்றியும், அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

உலக ஆயர்கள் மாமன்றம்
உலக ஆயர்கள் மாமன்றம்

திருஅவைக்குச் செவிமடுத்தல் (#ListeningChurch) என்ற ஹாஷ்டாக்குடன், மாமன்றம் பற்றி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “மாமன்றம் பற்றி தெளிந்துதேர்வடைய இறைவார்த்தை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இதனால் மாமன்றம், தூய ஆவியாரின் திருவருளால் வழிநடத்தப்பட்டு குணப்படுத்தும் பாதையில் செல்லும். இன்றையக் காலக்கட்டத்தில் கடவுள் நமக்குச் சொல்ல விரும்புவது என்ன? மற்றும் அவர் எந்தப் பாதையில் நம்மை இட்டுச் செல்கிறார்? என்று நாம் அவரிடம் கேட்கவேண்டுமென்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலக அளவில் துவக்கப்பட்டுள்ள ஈராண்டு தயாரிப்புக்களின் முதல் கட்டப்பணிகள், அனைத்து மறைமாவட்டங்கள் மற்றும், பங்குத்தளங்களில், அக்டோபர் 17, வருகிற ஞாயிறன்று துவங்குகின்றன.

மேலும், அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று, சிலே நாட்டு சந்தியாகு உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Celestino Aos Braco அவர்களும், "அத் லிமினா" சந்திப்பையொட்டி போலந்து நாட்டு ஆயர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2021, 15:12