திருத்தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் சந்திப்பு

உலகில் அமைதி நிலவவும், பசி, போர்கள் மற்றும் அடக்குமுறைகளால் துன்புறுவோர் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியாற்றி வருவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் பாராட்டு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவிற்கு ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோசப் பைடன் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 29, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், 75 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்.

வத்திக்கானிலுள்ள திருத்தந்தையின் நூலகத்தில் இவ்வெள்ளி உள்ளூர் நேரம் பகல் 12.10 மணிக்குத் துவங்கிய இச்சந்திப்பு, பிற்பகல் 1 மணி 25 நிமிடங்கள் வரை நீடித்தது எனவும், இச்சந்திப்பில், உலகில் அமைதி நிலவவும், பசி, போர்கள் மற்றும் அடக்குமுறைகளால் துன்புறுவோர் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியாற்றி வருவதை, ஜோ பைடன் அவர்கள் பாராட்டினார் எனவும் கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும், பெருந்தொற்றை ஒழிப்பதற்கு, தடுப்பூசிகள் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கும், நியாயமான பொருளாதாரத்தை மீட்டெடுத்தலுக்கும் திருத்தந்தை மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் அமெரிக்க அரசுத்தலைவர் குறிப்பிட்டுப் பேசினார். தன் துணைவியார் மற்றும், அரசுப் பிரதிநிதிகளுடன் திருப்பீடத்திற்கு வருகைதந்த ஜோ பைடன் அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின்னர், அரசு பிரதிநிதிகள் குழுவினரை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அத்தலைவர்கள், பரிசுப்பொருள்களையும் பரிமாறிக்கொண்டனர். 

மேலும், திருத்தந்தையை தனித்தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன்.

இப்பூமிக்கோளத்தைப் பாதுகாத்து பராமரித்தல், நலவாழ்வை மேம்படுத்தல், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கை, குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோருக்கு உதவி, மனச்சான்று மற்றும், சமய சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு  போன்றவற்றில் இணைந்து பணியாற்றுதல், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் G20 மாநாடு, அரசியல் பேச்சுவார்த்தை வழியாக உலகில் அமைதியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு விவகாரங்கள் இச்சந்திப்புகளில் பேசப்பபட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 09:39