ஹங்கேரியின் புனித ஸ்தேவானின் மகுடம் ஹங்கேரியின் புனித ஸ்தேவானின் மகுடம் 

ஹங்கேரி, சுலோவாக்கியா திருத்தூதுப்பயணம், ஓர் ஆன்மீகப் பயணம்

ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், ஐரோப்பாவின் இதயத்திற்கு மேற்கொள்ளும் ஒரு திருப்பயணம் - மத்தேயோ புரூனி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 12, வருகிற ஞாயிறு முதல், 15, புதன் வரை, ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், இப்பயணம், ஒர் ஆன்மீகத் திருப்பயணமாக அமையும் என்று எடுத்துரைத்தார்.

52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்வதற்காக புடாபெஸ்ட் நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், திருநற்கருணையின் மேன்மையை உலகுக்கு உணர்த்திக்காட்டும் திருப்பயணமாக அமையும் என்றுரைத்த புரூனி அவர்கள், சுலோவாக்கியாவில், சர்வாதிகாரத்தால் புண்பட்டுள்ள மக்களை, திருத்தந்தை, அன்போடு தழுவிக்கொள்வார் எனவும், வருங்காலத்தின் மீது நம்பிக்கையை ஊட்டுவார் எனவும் கூறினார்.    

ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அவரது 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகவும், ஐரோப்பாவின் இதயத்திற்கு மேற்கொள்ளும் ஒரு திருப்பயணமாகவும் உள்ளது என உரைத்த புரூனி அவர்கள், இப்பயணம், 54 நாடுகளில், திருத்தந்தை, திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கும் என்று கூறினார்.

திருநற்கருணை ஆராதனையோடு 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை, துயருறும் அன்னை மரியாவிடம் செபிப்பதோடு அதனை நிறைவுசெய்வார் என்றும், இந்த அன்னை மரியா, சர்வாதிகாரத்தால் காயப்பட்டுள்ள ஸ்லாவியப் பூமியை இடைவிடாது காத்துவருகிறார் என்றும், புரூனி அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 12, வருகிற ஞாயிறு அதிகாலையிலேயே வத்திக்கானிலிருந்து ஹங்கேரி நாட்டிற்குப் புறப்படும் திருத்தந்தை, புடாபெஸ்ட் நகரின் தியாகிகள் வளாகத்தில், 52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி நிறைவேற்றுவார், அதற்குமுன்னர், அந்நாட்டு பிரதமர் Viktor Orbán அவர்களையும் சந்திப்பார் என்றும், பிரதமரும் அவரது குடும்பத்தினரும், இத்திருப்பலியில் பங்குகொள்வார்கள் என்றும் புரூனி அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 12, ஞாயிறு பிற்பகலில் சுலோவாக்கியா நாட்டின் தலைநகர் Bratislavaவில் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை, அந்நாட்டின் Prešov, Košice, Šaštin ஆகிய மூன்று நகரங்களிலும் பயணத்திட்டங்களை நிறைவேற்றுவார். அந்நாட்டில் வாழ்கின்ற யூத குழுமதத்தினரையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் புரூனி அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2021, 15:29