திருத்தந்தை, லித்துவேனியா பிரதமர் Šimonytė சந்திப்பு திருத்தந்தை, லித்துவேனியா பிரதமர் Šimonytė சந்திப்பு 

திருத்தந்தை, லித்துவேனியா பிரதமர் Šimonytė சந்திப்பு

பால்ட்டிக் கடலின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள, வட ஐரோப்பிய நாடான லித்துவேனியா, வடக்கே லாத்வியா, தென்கிழக்கே பெலாருஸ், தென்மேற்கே போலந்து, இரஷ்யா போன்ற நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 03, இவ்வெள்ளி காலையில், லித்துவேனியா குடியரசின் பிரதமர் Ingrida Šimonytė அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், லித்துவேனியா பிரதமர் Šimonytė.

லித்துவேனியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் மனித மாண்பையும், குடும்பத்தையும் பாதுகாக்க, நன்னெறி விழுமியங்களை ஊக்குவிப்பதில், கிறிஸ்தவர்கள், மற்றும், கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு, கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவது; உள்நாட்டு மற்றும், பன்னாட்டு அளவில் அமைதி மற்றும், பாதுகாப்பு; மனிதாபிமான குறிப்பாக, ஆப்கான் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் போன்ற விடயங்கள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது

பால்ட்டிக் கடலின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள, வட ஐரோப்பிய நாடான லித்துவேனியா, வடக்கே லாத்வியா, தென்கிழக்கே பெலாருஸ், தென்மேற்கே போலந்து, இரஷ்யா போன்ற நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

சந்திப்புக்கள்

மேலும், கத்தோலிக்கத் திருஅவையில், கிறிஸ்தவ நெறிகளை வாழும் முறையைக் கற்றுக்கொடுக்கின்ற, மற்றும், திருமுழுக்குப் பெறுவதற்கு, புதுக்கிறிஸ்தவர்களைத் தயார் செய்கின்ற, Neocatechumenal Way என்ற அமைப்பைத் தோற்றுவித்த Kiko Argüello அவர்களையும், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர், கர்தினால் மாரியோ கிரெக் அவர்களையும், ஓசியானியா பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, பேராயர் Novatus Rugambwa அவர்களையும், செப்டம்பர் 03, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2021, 14:56