ஊற்றின் புனித மரியா திருத்தலம், Caravaggio ஊற்றின் புனித மரியா திருத்தலம், Caravaggio 

முதுமை, ஒரு நோய் அல்ல, மாறாக, அது ஒரு சிறப்புச் சலுகை

வயதுமுதிர்ந்தோர், உதவிகள் தேவைப்படுபவர்கள் மட்டுமல்ல, நினைவுகளோடு கனவுகளையும் கொண்டிருப்பவர்கள். அவர்கள், இளைய தலைமுறைகளுக்கு மிக முக்கியமானவர்கள் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

முதுமை, ஒரு நோய் அல்ல, மாறாக, துன்புறும் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதற்கு கிடைத்த ஒரு சிறப்புச் சலுகை என்று, இத்தாலியின் வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்களுக்கு எழுதிய ஒரு மடலில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 16, இவ்வியாழன் மாலையில், இத்தாலியின் Caravaggio நகரில் அமைந்துள்ள ஊற்றின் புனித மரியா திருத்தலத்தில், லொம்பார்தியா மாநில ஆயர்களோடு, உடன்பிறந்த உணர்வு மற்றும், இறைவேண்டல் நாளைச் சிறப்பித்த வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்களுக்கு எழுதிய மடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சிறிதளவு நோய் மற்றும், சிறிதளவு முதுமை ஆகிய நிலையிலுள்ள தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வயதுமுதிர்ந்தோர், இயேசுவைப்போன்று சிலுவையைச் சுமப்பதால், நோயாளிகளைப் பாரமரிக்கும் குழுமத்தினர், இயேசுவில் உறுதியாக வேரூன்றப்பட்டவர்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை, வயதுமுதிர்ந்தோர், உதவிகள் தேவைப்படுபவர்கள் மட்டுமல்ல,   நினைவுகளோடு கனவுகளைக் கொண்டிருப்பவர்கள் எனவும், அவர்கள், இளைய தலைமுறைகளுக்கு மிக முக்கியமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்த அருள்பணியாளர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் அம்மடலில் கூறியுள்ள திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாலியில் பெருந்தொற்றால் இறந்த ஏறத்தாழ 300 அருள்பணியாளர்களுள், 92 பேர் லொம்பார்தியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மாந்துவா மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Roberto Busti அவர்கள் வழியாக,, திருத்தந்தையின் இம்மடல், அந்நிகழ்விற்கு அனுப்பப்பட்டது 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2021, 15:22