சுலோவாக்கியா நாட்டிலிருந்து விடைபெற்ற திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 12 கடந்த ஞாயிறன்று காலையில் உரோம் நகரிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 15 இப்புதனன்று, தன் 34வது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, உரோம் நகரின் சம்பீனோ விமானநிலையத்தை வந்தடைந்தார்.

செப்டம்பர் 12, ஞாயிறன்று, ஹங்கேரி நாட்டின் பூடபெஸ்ட் நகருக்குச் சென்ற திருத்தந்தை, அங்கு செப்டம்பர் 5ம் தேதி முதல், ஒரு வாரமாக நடைபெற்றுவந்த 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை தலைமையேற்று நடத்தியபின், அங்கிருந்து, சுலோவாக்கியா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார்.

நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டின் தலைநகர் பிராத்திஸ்லாவா, ஷாஷ்டின், பிரசோவ், கோஷிச்சே ஆகிய நகரங்களில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

சுலோவாக்கியா நாட்டின் பாதுகாவலரான துயருறும் அன்னை மரியாவின் திருநாள் செப்டம்பர் 15ம் தேதி, இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்ட வேளையில், அந்த அன்னையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள ஷாஷ்டின் தேசியத் திருத்தலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தின் இறுதி நிகழ்வாக, திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.

இப்புதன் பிற்பகலில், பிராத்திஸ்லாவா பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, சுலோவாக்கியா நாட்டு அரசுத்தலைவர், Zuzana Čaputová அவர்களும் ஏனைய உயர் அரசு அதிகாரிகளும் பிரியாவிடை வழங்கினர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆலித்தாலியா (Alitalia) விமான நிறுவனம் இவ்வாண்டு அக்டோபர் 15ம் தேதி மூடப்பட்டு, இனி, ITA என்ற புதிய பெயருடன் இயங்கவிருப்பதால், புதன் பிற்பகல் 1.45 மணிக்கு, திருத்தந்தையை ஏற்றிக்கொண்டு உரோம் நகருக்குத் திரும்பிய விமானமே, திருத்தந்தையர் பயன்படுத்தும் இறுதி Alitalia விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:45