விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு 

திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வீரத்துடன் சான்று பகர்ந்து, அதற்காக தங்களின் உயிரையே கையளித்த பல மறைசாட்சிகள் வாழ்ந்த பூமிக்கு, தன் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வீரத்துடன் சான்று பகர்ந்து, அதற்காக தங்களின் உயிரையே கையளித்த பல மறைசாட்சிகள் வாழ்ந்த, பூமிக்கு, அன்னை மரியாவின் திருப்பெயரின் திருநாளான, செப்டம்பர் 12, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 6 மணிக்கு, தன் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா ஆகிய இரு நாடுகளின் மக்கள், கம்யூனிச அரசின் பல ஆண்டுகால அடக்குமுறைகள், மற்றும், மதத்தின்மீது வெறுப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், நற்செய்திக்குத் துணிச்சலோடு சான்று பகர்ந்தவர்கள். இத்தகைய மக்கள் வாழ்ந்த ஹங்கேரி நாட்டுத் தலைநகர் பூடபெஸ்ட்டில் நடைபெற்றுவந்த 52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்வதற்காக, இஞ்ஞாயிறு உரோம் நேரம் அதிகாலை 5.20 மணிக்கே, வத்திக்கானிலிருந்து உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமானநிலையம் சென்று அந்நகருக்கு, A320 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு

பூடபெஸ்ட் விமானப் பயணத்தில் திருத்தந்தை
பூடபெஸ்ட் விமானப் பயணத்தில் திருத்தந்தை

இத்திருத்தூதுப் பயணம் பற்றிய செய்திகளை வழங்குவதற்காக, 78 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் திருத்தந்தையோடு பயணம் மேற்கொண்டனர். இவர்களில், ஐந்து பேர் ஹங்கேரி நாட்டவர், மற்றும், மூன்று பேர், சுலோவாக்கியா நாட்டவர். இவர்களை விமானப் பயணத்தில் முதலில் வாழ்த்திய திருத்தந்தை, தன்னோடு பயணம் மேற்கொள்ளும் சிலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார். இதுநாள்வரை திருத்தந்தையரின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றிய பேரருள்திரு மரினோ குய்தோ அவர்களும், திருத்தூதுப் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த பேரருள்திரு Dieudonné Datonou அவர்களும் ஆயர்களாக நியமனம் பெற்றிருப்பதையும், அவர்கள், திருத்தூதுப் பயணத்தில் தனக்குத் துணைநிற்பது இதுவே இறுதிமுறை என்றும் கூறி, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார். இன்னும், ஆயர் Datonou அவர்களின் பணியை ஆற்றவிருக்கின்ற, இந்தியரான பேரருள்திரு George Jacob Koovakad அவர்களையும் சுட்டிக்காட்டி அவருக்கும் தன் நல்வாழ்த்தைத் தெரிவித்தார். பேரருள்திரு George அவர்கள், எப்போதும் புன்னகையோடு காணப்படுபவர், அவர் புன்னகை மன்னன் என்றும், அவரை, புன்முறுவலோடு நோக்கினார், திருத்தந்தை. இவ்வாறு நல்லதொரு சூழலை உருவாக்கி, தனது 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2021, 15:07