Šaštín தேசியத் திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டின் பாதுகாவலரான துயருறும் அன்னை மரியாவின் திருநாள் செப்டம்பர் 15ம் தேதி, இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்ட வேளையில், அந்த அன்னையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள Šaštín தேசியத் திருத்தலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த Šaštín தேசியத் திருத்தலத்திற்கு, சுலோவாக்கியா மக்கள், நம்பிக்கையோடும், பக்தியோடும் அன்னையைத் தேடி வருகின்றனர், ஏனெனில், அந்த அன்னை, இயேசுவை, அவர்களிடம் கொணர்கிறார் என்பதை, அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். இன்று நாம் வாசித்த நற்செய்தியின் ஒளியில், மரியா, நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். நம்பிக்கையின் மூன்று அம்சங்களாக, பயணித்தல், இறைவாக்குரைத்தல், மற்றும் கருணைகொள்ளுதல் ஆகியவற்றை எண்ணிப்பார்க்கலாம்.

மரியாவின் நம்பிக்கை, அவரை ஒரு பயணத்தில் ஈடுபடுத்துகிறது. வானதூதர் கபிரியேலின் செய்தியைக் கேட்டதும், அந்தச் செய்தி தந்த மகிழ்வில், நிறைவில், அவர் தன்னையே நான்கு சுவர்களுக்குள் அடைத்துக்கொள்ளவில்லை. மாறாக, தேவையில் இருக்கும் தன் உறவினரான எலிசபெத்துக்கு உதவிசெய்ய, "மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" (லூக்கா 1:39). தான் இறைமகனுக்கு தாயாகப்போகும் அருளை, தனக்குக் கிடைத்த ஒரு பரிசாக எண்ணிப்பார்க்காமல், தன் தாய்மையை, ஒரு மறைப்பணியாக ஏற்று, அதை நிறைவேற்ற, அவர் பயணமானார்.

இன்றைய நற்செய்தியில், மரியா, எருசலேமுக்கு பயணமான நிகழ்வைக் கேட்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும், அந்த அன்னை, தன் மகனைப் பின்தொடரும் பயணத்தில் ஈடுபட்டு, இறுதியில் அவருடன் கல்வாரிக்கும் பயணமானார். இன்றும், அன்னை மரியா, பயணம் செய்வதை, ஒருபோதும் நிறுத்தவில்லை.

அடுத்து, மரியாவின் நம்பிக்கை, இறைவாக்குரைப்பதாகவும் திகழ்ந்தது. தன் வாழ்நாள் முழுவதும், கடவுளின் பிரசன்னத்தை, இவ்வுலகில் எடுத்துரைத்த இறைவாக்கு பணியை, அவர் செய்தார். பல்வேறு இறைவாக்கினார்களால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்ணாக, அன்னை மரியா விளங்கினார்.

இஸ்ரயேல் மக்களின் இறைவாக்குரைக்கும் பாரம்பரியத்தின் மகுடமாக அன்னை மரியா விளங்கினார், ஏனெனில், அவர், இயேசு என்ற இறைவார்த்தையை இவ்வுலகிற்கு கொணர்ந்தார். இந்த இயேசுவைக் குறித்து, எருசலேம் கோவிலில், சிமியோன், இவ்வாறு கூறினார்: “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்." (லூக்கா 2:34)

இயேசு 'எதிர்க்கப்படும் அடையாளமாக' உள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர் இருளுக்குள் ஒளியைக் கொணர்ந்தார், அந்த இருளில் இருந்தனவற்றை வெளிச்சமிட்டுக் காட்டினார். ஆனால், இருள் தொடர்ந்து அவருடன் போராடி வருகிறது. இயேசு, தன் சீடர்களிடம், தான் இவ்வுலகிற்கு அமைதியை அல்ல, வாளையே கொணர வந்ததாகக் கூறினார். (காண்க. மத். 10:34). இயேசுவுக்கு முன் நம் முரண்பாடுகள், போலி தெய்வங்கள், சோதனைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

சுலோவாக்கியா நாட்டிற்கு இத்தகைய இறைவாக்கினர்கள் இன்று தேவைப்படுகின்றனர். இறைவாக்குரைப்பது, உலகோடு பகைமை கொள்ளும் நிலை அல்ல, ஆனால், உலகிற்கு 'எதிர்க்கப்படும் அடையாளமாக' இருப்பது என்று பொருள். கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வின் வழியே, நற்செய்தியின் அழகை, இவ்வுலகிற்கு எடுத்துரைக்கவேண்டும். சுயநலத்தில் மூழ்கியிருக்கும் இவ்வுலகில், அந்நியரை வரவேற்று விருந்தோம்பும் நறுமணத்தைப் பரப்புகிறவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்கவேண்டும்.

இறுதியாக, மரியன்னையின் நம்பிக்கை அவரை கருணையுள்ளவராக வாழ வைத்தது. 'ஆண்டவரின் அடிமை'யான (காண்க. லூக். 1:38) அவர், கானா திருமண விருந்தில் தேவையான அளவு இரசம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். (காண்க. யோவா. 2:1-12) தன் மகனின் பணிகளில் பங்கேற்று, இறுதியில் கல்வாரியில், சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தார்.

துயருறும் அன்னை மரியா, சிலுவையடியில் நின்றுகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் விலகிச் செல்லவில்லை. அவரது கருணை உள்ளத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

துயருறும் அன்னையை தியானிக்கும் நாம், நமது நம்பிக்கை, கருணையுள்ளதாக திகழ்வதற்கு நம்மையே மாற்றிக்கொள்வோம். நம் நம்பிக்கை வெறும் கருத்தளவு சிந்தனையாக இல்லாமல், தேவையில் இருப்போருடன் நம்மையே இணைத்துக்கொள்ளும் கருணையாக மாறட்டும்.

நம் நம்பிக்கையை, பயணிக்கும், இறைவாக்குரைக்கும், மற்றும் கருணைக்கொள்ளும் நம்பிக்கையாக மாற்ற மிகத் தூய அன்னை மரியா, நமக்கு வரங்களைப் பெற்றுத்தருவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2021, 13:16