பிராத்திஸ்லாவாவில் இயேசு சபையினர் சந்திப்பு பிராத்திஸ்லாவாவில் இயேசு சபையினர் சந்திப்பு 

பிராத்திஸ்லாவாவில் கிறிஸ்தவ சபையினர், இயேசு சபையினர்

சுலோவாக்கியாவில் எண்பது இயேசு சபைத் துறவியர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 53 பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 12, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹங்கேரி நாட்டுத் தலைநகர் பூடபெஸ்ட்டில், 52வது உலக திருநற்கருணை மாநாட்டுத் திருப்பலியை நிறைவுசெய்து, அன்று பிற்பகலில், சுலோவாக்கியா நாட்டின் தலைநகர் பிராத்திஸ்லாவாவுக்குச் சென்றார். அந்நகரின் பன்னாட்டு விமானத்தளத்தில் சென்றிறங்கிய திருத்தந்தையை, அரசுத்தலைவர் Zuzana Čaputová அவர்கள் வரவேற்க, இரு சிறார், திருத்தந்தையிடம் மலர்கள் அளித்து ஆசீர்பெற்றனர். விமானத்தளத்தில், இராணுவ மரியாதையும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. அதற்குப்பின், அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை. அன்று உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில், அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். அச்சபையினரிடம், மதங்கள், ஒன்றிப்பு, உடன்பிறந்த உணர்வு போன்றவற்றில் வளரவும், தியானத்தையும், செயல்களையும் ஒன்றிணைத்து ஆற்றவும் வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். சுலோவாக்கியா நாட்டில் 11 கிறிஸ்தவ சபைகள் உள்ளன. அச்சபைகளின் அவையில், கத்தோலிக்க ஆயர் பேரவை பார்வையாளராக உள்ளது. இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு சந்திப்பை முடித்து, திருப்பீடத் தூதரகத்தில், இயேசு சபை துறவியரைச் சந்தித்து, அவர்களோடு கலந்துரையாடினார், இயேசு சபையைச் சார்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்.

பிராத்திஸ்லாவாவில் கிறிஸ்தவ சபையினர்
பிராத்திஸ்லாவாவில் கிறிஸ்தவ சபையினர்

இயேசு சபையினரோடு திருத்தந்தை

குடும்ப சந்திப்பு என்று விளக்கம் கொடுக்கப்பட்ட, இயேசு சபையினரோடு திருத்தந்தை நடத்திய இச்சந்திப்பில், திருத்தந்தை, அத்துறவியர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தும், தானே சில கேள்விகளையும் கேட்டார். இச்சந்திப்பு பற்றிக் கூறிய இயேசு சபையினர், அப்பொழுதுதான் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளைச் சந்தித்து களைத்திருந்தாலும், தங்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை மிகவும் உற்சாகமாக காணப்பட்டார் என்று கூறினர். திருத்தந்தை கூறியவற்றுக்கு நாங்கள் செவிமடுத்தோம் எனவும், நாங்கள் விரும்புவது, மற்றும், ஆற்றும் செயல்கள் பற்றி அவரிடம் கூறமுடிந்தது எனவும், எங்களது பணியில் புதிய சவால்களை எதிர்கொள்கிறோம், திருத்தந்தை எங்களை ஊக்கப்படுத்தினார் எனவும், அவர்கள் கூறினர். சுலோவாக்கியாவில் எண்பது இயேசு சபைத் துறவியர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 53 பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இச்சந்திப்புடன் திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2021, 14:31