திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: பொறுமை, இரக்கத்தோடு இருக்க உதவுகின்றது

நம்மையும், நம் குழுமங்களையும், நம் உலகத்தையும் கருணையோடு நோக்குவதற்கு, பொறுமை நமக்கு உதவிசெய்கின்றது” – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொறுமை, மற்றும், கருணை ஆகிய இரு பண்புகள், நம் வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 21, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், குறுஞ்செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

“நம்மையும், நம் குழுமங்களையும், நம் உலகத்தையும் கருணையோடு நோக்குவதற்கு, பொறுமை நமக்கு உதவிசெய்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

சந்திப்புக்கள்

மேலும், இஸ்ரேல், மற்றும் சைப்ரஸ் பகுதியின் திருப்பீடத் தூதராகவும், எருசலேம், மற்றும், பாலஸ்தீனாவின் திருப்பீடப் பிரதிநிதியாகவும் பணியாற்றும் பேராயர் Adolfo Tito Yllana அவர்களையும், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் Kevin Joseph Farrell அவர்களையும், ஆகஸ்ட் 21,  இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறப்பு பிரதிநிதிகள் நியமனம்

இன்னும், இத்தாலியின் பியெல்லா மறைமாவட்டத்தின் ஒரோபாவின் கறுப்பு அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டு நிகழ்வில், தனது சிறப்பு பிரதிநிதியாகப் பங்கேற்பதற்கு, கர்தினால்கள் அவையின் தலைவராகப் பணியாற்றும், கர்தினால் Giovanni Battista Re அவர்களை, இச்சனிக்கிழமையன்று, நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்நிகழ்வு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நடைபெறுகின்றது. 1620ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, இந்நிகழ்வு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இன்னும், செக் குடியரசின் Tetín நகரில், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி சிறப்பிக்கப்படும், புனித லுட்மிலா மறைசாட்சியானதன் 1,100ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில், தனது சிறப்பு பிரதிநிதியாகப் பங்கேற்பதற்கு, வியன்னா பேராயர் கர்தினால்   Christoph Schönborn அவர்களை, இச்சனிக்கிழமையன்று, நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித லுட்மிலா. பொகேமியாவின் முதல் புனிதர் மற்றும், இளவரசர் புனித வென்சஸ்லாசின் பாட்டி ஆவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2021, 14:52