புனித தமாசோ வளாகத்தில்  புதன் மறைக்கல்வியுரை 2021.06.30 புனித தமாசோ வளாகத்தில் புதன் மறைக்கல்வியுரை 2021.06.30  

வத்திக்கானின் 6ம் பவுல் அரங்கில் புதன் மறைக்கல்வியுரை

ஆகஸ்ட் 04, இப்புதன் உரோம் நேரம் காலை 9.15 மணிக்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோடை விடுமுறை காரணமாக, ஒரு மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரைகள், ஆகஸ்ட் 04, இப்புதன்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன.

இத்தாலியில் துவங்கியுள்ள கோடைகாலத்தை முன்னிட்டு, வத்திக்கான்  பணியாள்களுக்கு ஓய்வுகொடுக்கும் நோக்கத்தில், ஜூலை மாதத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதன் மறைக்கல்வியுரைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும், இப்புதனன்று துவக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 04, இப்புதன், உரோம் நேரம், காலை 9.15 மணிக்கு, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரையைத் துவக்குவார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஏறத்தாழ எட்டரை ஆண்டு தலைமைத்துவப்பணியில், 365 பொது மறைக்கல்வியுரைகளை ஆற்றியுள்ளார்.

மேலும், ஜூலை மாதம் 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெருங்குடல் தொடர்பான நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, ஓய்வெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு ஜூன் 30ம் தேதி, வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில் நடைபெற்ற புதன் மறைக்கல்வியுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார். குறிப்பாக, நம் ஆண்டவர், நம் அனைவருக்கும் வகுத்துள்ள மீட்புத்திட்டம் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, இறையருள், நம் இதயங்களையும், வாழ்வையும், மாற்றுகின்றது, மற்றும், நாம் புதிய பாதைகளைக் காணச் செய்கின்றது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2021, 14:46