Monfort துறவுசபையின் மாநிலத்தலைவராகப் பணியாற்றிய அருள்பணி Olivier Maire Monfort துறவுசபையின் மாநிலத்தலைவராகப் பணியாற்றிய அருள்பணி Olivier Maire 

அருள்பணி Olivier Maire மரணத்திற்கு இரங்கல் செய்திகள்

"அருள்பணி Olivier Maire அவர்கள் கொலையுண்டதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். அவரை இழந்து துயருறும் Monfort துறவுசபையைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்" - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அருள்பணி Olivier Maire அவர்கள் கொலையுண்டதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். அவரை இழந்து துயருறும் Monfort துறவுசபையைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பிரான்ஸ் நாட்டிலுள்ள கத்தோலிக்கர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 11, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் பணியாற்றிவரும் Monfort மறைப்பணியாளர்கள் துறவுசபையின் மாநிலத்தலைவராகப் பணியாற்றிவந்த அருள்பணி Maire அவர்களின் கொலை செய்யப்பட்ட உடல், Saint-Laurent-Sur-Sevre என்ற அவரது இல்லத்தில், ஆகஸ்ட் 9, இத்திங்களன்று, கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலையைப்பற்றி கேள்விப்பட்ட பிரான்ஸ் ஆயர் பேரவையும், பிரான்ஸ் நாட்டின் துறவியர் பேரவையும் தங்கள் அதிர்ச்சியையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்டு செய்திகள் அனுப்பியுள்ளன.

அருள்பணி Maire அவர்களின் மரணத்தையொட்டி, பிரான்ஸ் அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இவ்வருள்பணியாளரின் தாராள மனமும், பிறரன்பும் அவரது செயல்கள் அனைத்திலும் வெளிப்படையாகத் தெரிந்தன என்று கூறியுள்ளார்.  

ருவாண்டா நாட்டிலிருந்து பிரான்சுக்கு குடிபெயர்ந்த 40 வயது மிக்க ஒருவர், இக்கொலையை தான் செய்ததாக, காவல்துறையிடம் கூறியதைத் தொடர்ந்து, விசாரணைகள் நடந்துவருகின்றன.

குடிபெயர்ந்து வாழ்ந்த இம்மனிதருக்கு Maire அவர்கள் புகலிடம் தந்து, தங்கள் இல்லத்தில் அவரைத் தங்கவைத்தார் என்று சொல்லப்படுகிறது.

அருள்பணி Maire  அவர்களை கொலைசெய்ததாக கூறிவரும் ருவாண்டா நாட்டவர், 2020ம் ஆண்டு ஜூலை மாதம், பிரான்ஸ் நாட்டிலுள்ள Nantes பேராலயத்திற்கு தீவைத்தவர் என்றும் கருதப்படுகிறார்.

1961ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் Besançon என்ற ஊரில் பிறந்த அருள்பணி Maire அவர்கள், Montfort மறைப்பணியாளர்கள் துறவு சபையில் இணைந்து, 1990ம் ஆண்டு அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

விவிலிய அறிஞரான அருள்பணி Maire அவர்கள், தன் பணிவாழ்வின் பல ஆண்டுகள் ஆப்ரிக்காவில் செலவழித்தார். ஆன்மீக தியானங்கள் வழங்குவதில் பெயர்பெற்ற அருள்பணி Maire அவர்கள், தன் 61வது வயதில் கொலை செய்யப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:18