யாஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு யாஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு  

ஹெய்ட்டி, பங்களாதேஷ், வியட்நாம் நாடுகளுக்கு திருத்தந்தை உதவி

யாஸ் புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டு மக்களுக்கு ஏறத்தாழ 69 ஆயிரம் டாலர்களை வழங்குகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடுமையான நிலநடுக்கம், கடும் புயல் மற்றும், சமுதாய-பொருளாதாரச் சரிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள, ஹெய்ட்டி, பங்களாதேஷ், மற்றும், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் வழியாக, ஹெய்ட்டி நாட்டிற்கு, முதல் கட்ட அவசரகால உதவியாக, 2 இலட்சம் யூரோக்களை திருத்தந்தை அனுப்பவுள்ளார்.

ஹெய்ட்டி நாட்டு திருப்பீடத் தூதர் வழியாக வழங்கப்படும் இந்நிதியுதவி, அந்நாட்டில் இப்பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மறைமாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை கூறியுள்ளது. ஹெய்ட்டி நாட்டிற்காக, ஆகஸ்ட் 15, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னும், திருத்தந்தை செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கோவிட்19ஆல் பெருந்துயரை எதிர்கொண்டுவரும், கரீபியன் தீவு நாடான ஹெய்ட்டியில், ஆகஸ்ட் 21, கடந்த சனிக்கிழமையன்று 7.2 ரிக்டர் அளவில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தில், குறைந்தது 2,200 பேர் உயிரிழந்தனர், 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமுற்றனர், மற்றும், பெருமளவில் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் யாஸ் புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டு மக்களுக்கு ஏறத்தாழ 69 ஆயிரம் டாலரும், கோவிட்-19 பெருந்தொற்றின் கடுந்தாக்கத்தால், சமூக-பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் வியட்நாம் நாட்டு மக்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்களும் வழங்குவதற்கு, திருத்தந்தை தீர்மானித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2021, 14:43