Laudato Si’ அமைப்பினர்  சந்திப்பு Laudato Si’ அமைப்பினர் சந்திப்பு 

நம் பூமியைப் பாதுகாப்பது, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முக்கியம்

கடவுளின் படைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் மனுவில் எல்லாரும் கையெழுத்திடுமாறு விண்ணப்பம் - Laudato Si’ அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம் என பொதுவாக அறியப்படும், Laudato Si’ அமைப்பின் இயக்குனர்கள் குழு ஒன்று, ஆகஸ்ட் 26, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்புக்குப்பின்னர், வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அவ்வமைப்பின் நிர்வாக குழுவின் தலைவராகப் பணியாற்றும் Lorna Gold அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தது பற்றியும், தங்கள் அமைப்பின் முக்கிய பணி பற்றியும் எடுத்துரைத்தார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு இன்றியமையாதது என்றும், நம் பொதுவான இல்லத்தைப் பாரமரிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், Lorna Gold அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம், முதல் தேதியிலிருந்து 12ம் தேதி வரை, கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும், காலநிலை மாற்றம் குறித்த COP26 உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள், கடவுளின் படைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் மனுவில் எல்லாரும் கையெழுத்திடுமாறு, Lorna Gold அவர்கள் அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை பராமரிப்பது குறித்து, 2015ம் ஆண்டில் வெளியிட்ட மிகச்சிறந்த “Laudato si’ திருமடல், நம் சமுதாயங்கள், மற்றும், உலகில் உண்மையிலேயே வாழப்படவேண்டும் என்பதற்காக, தங்களது அமைப்பு உழைத்து வருகிறது என்றும், Lorna Gold அவர்கள் கூறினார்.

Laudato si’ அமைப்பு
Laudato si’ அமைப்பு

எங்களது இயக்கம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை ஊக்குவிக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் என்றுரைத்த Lorna Gold அவர்கள், “Laudato si’ திருமடல், உலகெங்கும் சென்று பணியாற்றுவதற்கு ஒரு வழி எனவும், படைப்போடும், நம் சகோதரர், சகோதரிகளோடும், வலிமையான ஓர் உறவைக் கட்டியெழுப்ப அனைவரையும் அழைப்பது, ஒரு நற்செய்தி அறிவிப்புப்பணிதானே எனவும் கூறினார்.

பிரேசிலின் அமேசான் பகுதியின் தலைவர், ஹவாய் நாட்டு அறிவியலாளர்கள்,  இந்திய வளர்இளம்பருவத்தினர் ஒருவர், செனகெல் நாட்டு இளைஞர் ஒருவர் உட்பட, “Laudato si’ அமைப்பின் இயக்குனர்கள் குழு, இவ்வியாழனன்று வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்து கலந்துரையாடியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2021, 15:20