திருத்தந்தை: அமைதியின் கனவில் நம் வேர்களை ஊன்றுவோம்

லெபனான் நாடு, மீண்டும், அமைதி, மற்றும், உடன்பிறந்தஉணர்வுக்கு உலகளாவிய செய்தியாகத் திகழமுடியும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல்வேறு பிரச்சனைகளால் சிதைந்துள்ள லெபனான் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என, இறைவேண்டல் செய்ததோடு, அந்நாட்டு மக்கள், தங்களின் வேர்களுக்குத் திரும்பவேண்டும், ஏனெனில் அவற்றிலிருந்தே மலர்கள் மலரும் என்று, ஜூலை 01, இவ்வியாழன் மாலையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"அமைதிக்கென ஆண்டவராகிய கடவுள் திட்டங்கள் வகுத்துள்ளார்: லெபனான் அமைதிக்கென இணைவோம்" என்ற மையக்கருத்துடன், ஜூலை 1, இவ்வியாழனன்று, ஓர் இறைவேண்டல் நாள் வத்திக்கானில் நடைபெற்றது.

அந்நாளின் நிறைவு நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், லெபனான் நாட்டின், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என, பத்துப் பேருடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றினார். அச்செப நிகழ்வில் மத்தியக் கிழக்கின் மக்கள் பலர் பங்குபெற்றனர்.

இந்நாளில், இறை மக்களின் செபங்களால் உறுதிப்படுத்தப்பட்டு, இந்த இருளான சூழலை எதிர்கொள்வதற்கு, மேயப்பர்களாகிய நாங்கள், கடவுளின் ஒளியால் வழிநடத்தப்படும் வழிகளை ஒன்றிணைந்து தேடினோம் என்று, தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை,  இந்த அவரது ஒளியில், நாங்கள் இழைத்த தவறுகளை நோக்கினோம், அவற்றுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பை இறைஞ்சினோம் என்று கூறினார்.  

ஒரே மன்றாட்டில் இணைவோம்

தீர், சீதோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண், தன் துன்பங்களில், “ஆண்டவரே, எனக்கு இரங்கும்” (மத்.15,22-25) என இயேசுவிடம் தொடர்ந்து கெஞ்சி மன்றாடியதைக் குறிப்பிட்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்ணின் மன்றாட்டு, இன்று உறுதியான நிலைமை, நம்பிக்கை மற்றும், அமைதிக்காக ஏங்கும் லெபனான் மக்களின் இறைவேண்டலாக மாறியுள்ளது என்று கூறினார்.

இவ்வாறு அமைதிக்காக ஆண்டவரிடம் மன்றாடும் லெபனான் மக்களோடு நாம் அனைவரும் இணைவோம் என்றுரைத்த திருத்தந்தை, லெபனான் சிறிய நாடாக இருந்தாலும், அது மிகப்பெரும் நாடு எனவும், அதைவிட மேலாக, அமைதி, மற்றும், உடன்பிறந்த உணர்வின் உலகளாவிய செய்தி, மத்தியக் கிழக்கிலிருந்து பிறக்கும் நாடாக லெபனான் மீண்டும், திகழமுடியும் எனவும் கூறினார்.

கேடு விளைவிப்பதற்கான திட்டங்களை அல்ல, மாறாக, அமைதியை அளிக்கும் திட்டங்களையே ஆண்டவர் வைத்திருக்கிறார் (எரே.29,11) என்ற விவிலியக் கூற்றை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இந்த கேடு நிறைந்த காலக்கட்டத்தில், லெபனான், அமைதியை உருவாக்கும் திட்டத்தில் உறுதியாய் இருக்கவேண்டும் என்று, நாம் விரும்புகிறோம் என, உரக்கச் சொல்வோம் என்றார்.

பல்வேறு மதத்தினரும், கிறிஸ்தவ சபைகளும் வாழ்கின்ற லெபனான், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, மற்றும், உடன்பிறந்தஉணர்வின் பூமியாக அமைவதே அந்நாட்டின் அழைப்பாகும் என்றுரைத்த திருத்தந்தை, லெபனான் நாட்டு மக்களுக்கென சிறப்பு அழைப்பு ஒன்றையும் முன்வைத்தார். 

லெபனான் மக்களுக்கு அழைப்பு

இந்நாட்டின் முன்னோர்கள் சென்ற பாதையை நினைத்துப் பார்த்து, அமைதியின் கனவுகளில் வேர்களை ஊன்றுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நீதியின்றி அமைதி கிடைக்காது என்பதை மனதில் இருத்தி, அந்நாட்டின் தற்போதைய பொருளாதார, சமுதாய, மற்றும், அரசியல் சூழல்களுக்கு, நீடித்து நிலைத்துநிற்கவல்ல தீர்வுகளைக் காணுமாறு, அரசியல் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அனைத்து கிறிஸ்தவர்களுக்கு...

உலகின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சிறப்பு அழைப்பு ஒன்றை முன்வைத்த திருத்தந்தை, வருங்காலத்தை ஒன்றிணைந்து கட்டுமாறும், பகிர்ந்துகொள்வதால் மட்டுமே வருங்காலம் அமைதியில் நிறையும் என்றும் கூறினார்.

இறுதியாக, லெபனான் நாட்டு கவிஞர் கலீல் கிப்ரான் அவர்களின் கவிதை வரிகளை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருக்கடியின் இரவில், நாம் எல்லாரும் ஒன்றிப்பில் நிலைத்திருப்போம், நேர்மையான உரையாடல் மற்றும், தூய்மையான எண்ணங்கள் வழியாக, இருளான இடத்தில் ஒளியைக் கொணரமுடியும் என்று கூறினார்.

நம் அனைத்து முயற்சிகளையும் அமைதியின் இளவரசராம் கிறிஸ்துவிடம் அர்ப்பணிப்போம், போர்களின் இரவு, நம்பிக்கையின் புதிய விடியலுக்குமுன் மறைந்துபோகட்டும், காழ்ப்புணர்வுகள் முடியட்டும், இணக்கமின்மைகள் மறையட்டும்,  லெபனான் மீண்டும் அமைதியின் ஒளியை வீசட்டும் என்று, தன் மறையுரையை திருத்தந்தை நிறைவுசெய்தார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2021, 15:38