தாத்தாக்கள், பாட்டிகள் முதல் உலக நாள் இறைவேண்டல்

கைவிடப்பட்டநிலை, மற்றும், தனிமை ஆகியவற்றை உணர்கின்றவர்களோடு, குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், இவ்வுணர்வுகளைக் கூடுதலாக எதிர்கொள்கின்றவர்களோடு, ஆண்டவர் மிக நெருக்கமாக இருக்கிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 25, வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாளுக்கென்று, இறைவேண்டல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 23, இவ்வெள்ளியன்று, காணொளி வழியாக வெளியிட்டுள்ளார்.

என் நம்பிக்கையும், பாறையும், அரணுமாக இருக்கின்ற ஆண்டவரே, பலவீனத்தில் என்னைத் தாங்கிப்பிடியும், உலக முடிவுவரை எந்நாளும் நீர் என்னுடன் இருக்கிறீர் என்ற உறுதியில், நீர் எனக்கு அளித்துள்ள ஒவ்வொரு நொடிப்பொழுதையும், முழுமையாக வாழ அருள்புரியும் என்று, வயதுமுதிர்ந்தோர் இறைவேண்டல் செய்யுமாறு, திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் இறைவேண்டல்

  • ஆண்டவரே, உமது பிரசன்னத்தால் ஆறுதலாக இருப்பதற்கு நன்றி,
  • தனிமையிலும்கூட நீரே எனது நம்பிக்கை, நீரே எனது பற்றுறுதி;
  • என் இளமைமுதல் நீர் என் பாறையாகவும், அரணுமாகவும் இருந்துவந்துள்ளீர்!
  • ஒரு குடும்பத்தை, மற்றும், நீண்ட ஆயுளை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி.
  • மகிழ்ச்சியான, மற்றும், துன்பமான நேரங்களுக்காக,
  • நிறைவேறியுள்ள கனவுகளுக்காக, மற்றும், இன்னும் எனக்கு முன்னால் இருக்கின்றவற்றிற்காக உமக்கு நன்றி.
  • நீர் என்னை எதற்காக அழைத்தீரோ, அந்த புதுப்பிக்கப்பட்ட பலனுள்ள இந்த நேரத்திற்காக நன்றி.
  • ஓ ஆண்டவரே, எனது நம்பிக்கையை அதிகரித்தருளும்,
  • அமைதியின் கருவியாக என்னை ஆக்கியருளும்;  
  • என்னைவிட அதிகம் துன்புறுவோரை வரவேற்க,
  • கனவுகாண்பதை நிறுத்திவிடாமல் இருக்க,
  • புதிய தலைமுறைகளுக்கு உம் வியப்புக்களை எடுத்துரைக்க எனக்குக் கற்றுத்தாரும்,
  • திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், திருஅவையை பாதுகாத்தருளும், மற்றும், வழிநடத்தியருளும்.
  • அதனால் நற்செய்தியின் ஒளி, உலகத்தின் முடிவுகள்வரை எட்டும்.
  • ஓ ஆண்டவரே, உமது ஆவியை அனுப்பி இவ்வுலகைப் புதுப்பித்தருளும்.
  • அதனால், பெருந்தொற்றின் புயல் தணியும்.
  • வறியோர் ஆறுதல் பெறுவர், மற்றும், எல்லாப் போர்களும் முடிவடையும்.  
  • பலவீனத்தில் என்னைத் தாங்கிப்பிடியும்,
  • உலக முடிவுவரை எந்நாளும் நீர் என்னுடன் இருக்கிறீர் என்ற உறுதியில்,
  • நீர் எனக்கு அளித்துள்ள ஒவ்வொரு நொடிப்பொழுதையும்,
  • முழுமையாக வாழ அருள்புரியும். ஆமென்.

டுவிட்டர் செய்தி

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாளுக்கென்று காணொளி வழியாக வெளியிட்டுள்ள, இறைவேண்டலை மையப்படுத்தி,  ஜூலை 23, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“இந்தப் பெருந்தொற்று காலத்தில், நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை ஆண்டவர் அறிந்தே இருக்கிறார், கைவிடப்பட்டநிலை மற்றும், தனிமை ஆகியவற்றை உணர்கின்றவர்களோடு, குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், இவ்வுணர்வுகளைக் கூடுதலாக எதிர்கொள்கின்றவர்களோடு அவர் மிக நெருக்கமாக இருக்கிறார், இந்நிலையை அவர் அலட்சியப்படுத்துவதில்லை” என்ற சொற்கள், எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (IamWithYouAlways) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தாத்தாக்கள் பாட்டிகள் நாள்
தாத்தாக்கள் பாட்டிகள் நாள்

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் ஞாயிறன்று, தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாள் சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி 31ம் தேதி அறிவித்தார்.

அந்த உலக நாளுக்கென, இவ்வாண்டு ஜூன் மாதம் 22ம் தேதி, “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்ற தலைப்பில், செய்தி ஒன்றையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார். இதே தலைப்பில், ஜூலை 25, வருகிற ஞாயிறன்று, இந்த உலக நாள் முதன் முறையாகச் சிறப்பிக்கப்படுகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2021, 14:24