ஸ்லோவாக்கியா நாட்டிற்கான திருத்தூதுப்பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை ஸ்லோவாக்கியா நாட்டிற்கான திருத்தூதுப்பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை 

திருத்தந்தையின் செப்டம்பர் திருத்தூதுப்பயண விவரங்கள்

அனைத்துலக திருநற்கருணை மாநாட்டையொட்டி, ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட்டிலும், அதைத்தொடர்ந்து ஸ்லோவாக்கியா நாட்டிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயண விவரங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி முடிய, ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட், மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்கள், ஜூலை 21, இப்புதனன்று வெளியிடப்பட்டன.

செப்டம்பர் 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, இத்தாலிய நேரம் காலை 6 மணிக்கு உரோம் நகர் Fiumicino விமானதளத்திருந்து புறப்படும் திருத்தந்தை, ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட்டை உள்ளூர் நேரம் 7.45 மணிக்குச் சென்றடைவார்.

விமான நிலைய அதிகாரப்பூர்வ வரவேற்பிற்குப்பின், அரசுத்தலைவரையும், பிரதமரையும் அந்நாட்டு ஆயர்களையும் சந்தித்து உரையாடியபின், கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், மற்றும் யூத மத பிரதிநிதிகளையும் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகலில் நிறைவேற்றும், 52வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியுடன் அந்நாட்டிற்குரிய தன் திருப்பயணத்தை நிறைவுச்செய்வார். 

ஹங்கேரி நாட்டு தலைநகரில், 7 மணி நேரம் செலவிடும் திருத்தந்தை பிரான்சிஸ், அன்று பிற்பகலில், ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வார்.

12ம் தேதி பிற்பகல் உள்ளூர் நேரம் 3.30 மணிக்கு ஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராத்திஸ்லாவ் செல்லும் திருத்தந்தை, அன்றே, திருப்பீடத்தூதரகத்தில், ஏனைய கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டபின், அந்நாட்டின் இயேசு சபை அங்கத்தினர்களையும் அங்கேயே சந்தித்து உரையாடுவார்.

13ம் தேதி திங்களன்று, அரசுத்தலைவர், பிரதமர், அரசு அதிகாரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், என பலரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளில், தலைநகரில் உள்ள 'பெத்லகேம் மையத்தை' தனியாகச் சென்று சந்திப்பதுடன், அந்நாட்டின் யூத சமுதாய பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவார்.

செப்டம்பர் 14ம் தேதி, செவ்வாய்க்கிழமைமையன்று, ஸ்லோவாக்கியாவின் Košice நகருக்கு பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், புனித ஜான் கிறிஸோஸ்டம் பெயரிலான பைசன்டைன் திருவழிபாடு, ரோமா என்ற நாடோடி இன மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தல், இளையோரை சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இத்திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளான செப்டம்பர் 15ம் தேதி, Šaštin தேசியத் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், பிராத்திஸ்லாவ் விமானதளத்திலிருந்து பிரியாவிடை பெற்று, 1 மணி நேரம் 45 நிமிட விமான பயணத்திற்குப்பின், உரோம் நகர் சம்பினோ விமான நிலையம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஸ்லோவாக்கியா நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப்பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை, 'அன்னை மரியா, மற்றும் புனித யோசேப்புடன் இயேசுவை நோக்கிய பாதை' என்ற வார்த்தைகளுடன், வடிவமைக்கப்பட்டுள்ளது,

ஓர் இதயத்தின் நடுப்பகுதியை நோக்கி ஒரு பாதை செல்வதுபோன்றும், அந்த இதயத்தின் மேல் பகுதியில் சிலுவை வடிவமும், சிலுவையின் மேல் அரைவட்ட வடிவில் அன்னமரியாவின் ஏழு துயரங்களைக்குறிக்கும் ஏழு நட்சத்திரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த இலட்சனையில், ஸ்லோவாக்கிய தேசிய கொடியில் காணப்படும் வெள்ளை, நீலம், சிகப்பு, ஆகிய நிறங்களும், வத்திக்கான் கொடியிலுள்ள வெள்ளை, மற்றும் மஞ்சள் நிறங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2021, 14:13