திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஈராக் தாக்குதல்கள் குறித்து திருத்தந்தை கவலை

ஈராக்கில் ஒப்புரவு, மற்றும், அமைதியை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, வன்முறைச் செயல்கள் குறைத்துவிடாமல் இருக்க திருத்தந்தை செபிக்கின்றார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்றுள்ள தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்கள், மற்றும், நண்பர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அதேவேளை, அந்நாட்டில் ஒப்புரவு இடம்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு, மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 19, இத்திங்கள் மாலையில் பாக்தாத்தின், புகழ்பெற்ற Al-Wuhailat சந்தையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல், மற்றும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் கவலை தருகின்றன என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

ஜூலை 20, இச்செவ்வாயன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஈராக்கின் திருப்பீடத் தூதர், பேராயர் Mitja Leskovar அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில், அனுப்பிய இரங்கல் தந்திச் செய்தியில், அத்தாக்குதல் குறித்த திருத்தந்தையின் எண்ணங்கள் கூறப்பட்டுள்ளன.

அத்தாக்குதலில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறையமைதியடையவும், ஈராக்கில் ஒப்புரவு, மற்றும், அமைதியை  ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, எந்தவித வன்முறைச் செயல்களும் குறைத்துவிடாமல் இருக்கவும், திருத்தந்தை உருக்கமுடன்  செபிக்கின்றார் எனவும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 19, இத்திங்கள் மாலையில் பாக்தாத்தின், Sadr புறநகரில், மக்கள் நெருக்கடி மிகுந்த புகழ்பெற்ற சந்தையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், சிறார் உட்பட, குறைந்தது 36 பேர் இறந்துள்ளனர், மற்றும், 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

Shiite என்றழைக்கப்படும் ஷியா இஸ்லாம் பிரிவினர் அதிகமாக வாழ்கின்ற Sadr நகரிலுள்ள இச்சந்தைப் பகுதியில், ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாத அமைப்பால், 2021ம் ஆண்டு துவக்கத்திலிருந்து, இதுவரை மூன்று குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள், இத்திங்கள் மாலையில் இடம்பெற்ற தாக்குதல்கள், மிகவும் கடுமையானது என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதத்தில், ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டில் ஒப்புரவு மற்றும், மன்னிப்பு இடம்பெறுவதற்காக இறைவனை மன்றாடினார். மொசூல் நகரில், அந்நாட்டில் வன்முறைக்குப் பலியானவர்களுக்காக, திருத்தந்தை செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2021, 13:24