உரோம் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனை உரோம் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனை 

ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து ஜூலை 11 மூவேளை செப உரை

தனக்காகச் செபிக்கின்ற அனைவருக்கும் திருத்தந்தை நன்றி கூறுகிறார். தனக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் கேட்கிறார் - மத்தேயோ புரூனி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், பெருங்குடல் பிரச்சனை தொடர்பான நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அங்கேயே ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 11, வருகிற ஞாயிறு மூவேளை செப உரையை, அங்கிருந்தே வழங்குவார் என்று, திருப்பீட தகவல் தொடர்புத்துறையின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

அம்மருத்துவமனையின் பத்தாவது மாடியிலுள்ள அறையில் தங்கி, சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை, அந்த மாடியிலிருந்தே ஞாயிறு மூவேளை செப உரையை, வழங்குவார் என்றும், புரூனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 04, இஞ்ஞாயிறு மாலையில், இடம்பெற்ற மூன்று மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப்பின், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நலமடைந்து வருகிறார் என்றும், ஜூலை 08, இவ்வியாழனன்று, அவருக்கு நெஞ்சிலும், வயிற்றிலும் எடுக்கப்பட்ட CT ஸ்கான் எனும் ஊடுகதிர் அலகீடு பரிசோதனையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், புரூனி அவர்கள் அறிவித்தார்.

மேலும், திருத்தந்தை தன் பணிகளை ஆற்றத் துவங்கியுள்ளார், தான் தங்கியிருக்கும் பத்தாவது மாடியிலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தைக்கு ஏற்பட்ட இலேசான காய்ச்சலிலிருந்து அவர் குணமடைந்துள்ளார் என்றுரைத்த புரூனி அவர்கள், நல்வாழ்த்துக்களும், செபங்களும் நிறைந்த செய்திகளை  ஒவ்வொரு நாளும் தனக்கு அனுப்பும் அனைவருக்கும் திருத்தந்தை நன்றி கூறுகிறார் என்றும், தனக்காக தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2021, 14:28