"அனைவருக்கும் உணவு - அறம்சார்ந்த ஓர் அழைப்பு" - காணொளி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் நிலவும் பட்டினியைப் போக்கவும், ஏழை மக்களின் மாண்பை உயர்த்திப் பிடிக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தருணங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், கோவிட்-19 பெருந்தொற்று பணிக்குழுவும் இணைந்து ஒரு காணொளித்தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நியூ யார்க் நகரில் நடைபெறவிருக்கும் உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு முன்னேற்பாடாக, ஜூலை 26, இத்திங்கள் முதல், 28, இப்புதன் முடிய, உரோம் நகரில் நடைபெற்ற உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டின் தயாரிப்பு கூட்டத்தையொட்டி, இந்த காணொளித் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"Food for all - a moral call", அதாவது, "அனைவருக்கும் உணவு - அறம்சார்ந்த ஓர் அழைப்பு" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளித் தொகுப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014ம் ஆண்டு, FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் வழங்கிய உரையின் ஒரு கூற்றிலிருந்து ஆரம்பமாகி, 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, தன் புதன் மறைக்கல்வி உரையில் வழங்கிய கருத்துக்களுடன் நிறைவடைகிறது.

அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்டவேண்டுமெனில், பட்டினியாலும், ஊட்டச்சத்து குறைவாலும் துன்புறும் ஒவ்வொரு மனிதரையும் குறித்து நாம் அக்கறை கொண்டிருக்கவேண்டும் என்று FAO நிறுவனத்தில் திருத்தந்தை கூறிய கருத்துடன் இந்த காணொளித் தொகுப்பு ஆரம்பாகிறது.

2017ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை FAO நிறுவனத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஓர் உரையில், நமது வாழ்வு முறை, நம்மிடம் உள்ள வளங்களைப் பகிரும் முறை, உற்பத்தியைப் பெருக்கும் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தியது, இக்காணொளியில் இடம்பெற்றுள்ளது.

"Paradox of abundance", அதாவது, 'பெருமளவைக் கொண்டிருக்கும் புதிர்' என்ற கருத்தில், 2015ம் ஆண்டு திருத்தந்தை வெளியிட்ட ஒரு கருத்தில், இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு நம்மிடம் உள்ளது, இருப்பினும், ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதில்லை என்று கூறிய சொற்களும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளன.

"ஒரே மனித குடும்பம், அனைவருக்கும் உணவு" என்று உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உருவாக்கிய விருதுவாக்கை, திருத்தந்தை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தும் வண்ணம் கூறிய கருத்துக்களுடன் இந்தக் காணொளி நிறைவு பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2021, 14:06