காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

அன்பின் மகிழ்வு பன்னாட்டு சந்திப்பு – திருத்தந்தையின் செய்தி

ஆண், பெண் என்ற இரு இழைகளைக்கொண்டு நெய்யப்படும் சமுதாயம் என்ற துணியைப்போல, திருஅவையில், அருள்பணித்துவம், திருமணம் என்ற இரு அருளடையாளங்களை இணைத்து, திருஅவை கட்டியெழுப்பப்படவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பங்கள், இன்றையச்சூழலில் சந்திக்கும் தேவைகளை மையப்படுத்தி, தலத்திருஅவை பொறுப்பாளர்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் இணைந்துவரும் சந்திப்பை, கனிகள் வழங்கும் ஒரு தருணமாக, தூய ஆவியார் திருஅவைக்கு அமைத்துத்தருகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு சந்திப்பிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட திருப்பீட அவை, தற்போது சிறப்பிக்கப்பட்டுவரும் 'அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டின்' ஒரு முக்கிய நிகழ்வாக ஏற்பாடு செய்துள்ள ஓர் இணையவழி கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

நாம் எங்கு நிற்கிறோம்?

"அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலைப் பொருத்தவரை நாம் எங்கு நிற்கிறோம்? இந்த அறிவுரை மடலை செயல்படுத்தும் வழிகள்" என்ற தலைப்பில், ஜூன் 9, இப்புதனன்று துவங்கியுள்ள இணையவழி கருத்தரங்கில், ஆயர் பேரவைகளும், பன்னாட்டு இயக்கங்களும் கலந்துகொண்டிருப்பதைக் குறித்து, திருத்தந்தை, தன் காணொளிச் செய்தியில், மகிழ்வை வெளியிட்டுள்ளார்.

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலைப் பொருத்தவரை, நாம் எங்கு நிற்கிறோம்? என்ற கேள்வி, தலத்திருஅவை அளவிலும், உலகத் திருஅவை அளவிலும், குடும்பங்களுக்கு ஆற்றக்கூடிய பணிகளைப்பற்றி சிந்திக்க விடுக்கப்பட்டுள்ள ஒரு கேள்வி என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப ஆண்டில், கூடுதல் கனிகளை பெறுவதற்கு...

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் பலனாக, அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல் உருவானது என்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, தற்போது சிறப்பிக்கப்படும் குடும்ப ஆண்டில், இம்மடலின் கூடுதல் கனிகளை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று கூறியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வண்ணம், இன்று, தலத்திருஅவையும், அகில உலக கத்தோலிக்கத் திருஅவையும், குடும்பங்களுக்கு அதிகமதிகமாக செவிமடுக்கும் தேவை எழுந்துள்ளது என்று, தன் செய்தியில் வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேய்ப்புப்பணியில், அருள்பணியாளர்களும், குடும்பத்தினரும் இணைந்து பணியாற்றுவது அவசியமாகிறது என்று எடுத்துரைத்தார்.

அக்கிலா, பிரிஸ்கில்லா போல...

அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரும், அவர் மனைவி பிரிஸ்கில்லாவும், திருத்தூதர் புனித பவுலுடன் இணைந்து பணியாற்றியது போல, (காண்க. திருத்தூதர் பணிகள் 18) இன்றையத் திருஅவையில், தம்பதியரும், அவர்களின் குழந்தைகளும் திருஅவையின் குடும்பப்பணியில் மிக முக்கியமான சாட்சிகளாக விளங்கமுடியும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

அருள்பணித்துவ வாழ்வைப் போலவே, திருமண வாழ்வும் இறைமக்களைக் கட்டியெழுப்பும் சிறப்பான பணியைக் கொண்டுள்ளது என்று கூறிய திருத்தந்தை, குடும்பம் என்ற திருஅவையில், கிறிஸ்துவின் இருப்பு, தம்பதியரிடையிலும், பெற்றோர்-குழந்தைகள் உறவிலும் ஆழமாக வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணித்துவம், திருமணம் என்ற இழைகள்

ஆண், பெண் என்ற இரு இழைகளைக்கொண்டு நெய்யப்படும் சமுதாயம் என்ற துணியைப்போல, திருஅவையில், அருள்பணித்துவம், திருமணம் என்ற இரு அருளடையாளங்களை இணைத்து, திருஅவை கட்டியெழுப்பப்படவேண்டும் என்று, திருத்தந்தை, தன் காணொளிச் செய்தியில் வலிறுயுறுத்திக் கூறியுள்ளார்.

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலைப் பொருத்தவரை நாம் எங்கு நிற்கிறோம்? என்ற கேள்வியை மையப்படுத்தி நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஒவ்வொரு தலத்திருஅவையும், உலகெங்கும் பரவியிருக்கும் திருஅவையும், பொதுநிலையினரையும், அருள்பணியில் ஈடுபட்டிருப்போரையும் எவ்வாறு இணைத்துச் செல்லமுடியும் என்று சிந்திப்பது பயனளிக்கும் என்று, திருத்தந்தை ஆலோசனை வழங்கியுள்ளார்.

திருமண உறவில் ஈடுபட விழையும் இளையோருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் துவங்கி, நிறைவான குடும்ப வாழ்வு, தலத்திருஅவையில் குடும்பங்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகிய கருத்துக்களை இக்கருத்தரங்கில் கலந்துபேச இறையாசீரை தான் வழங்குவதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2021, 14:20