11ம் பயஸ் பாப்பிறை அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியினரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 11ம் பயஸ் பாப்பிறை அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியினரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களுக்கு திருத்தந்தை உரை

அருள்பணித்துவ பயிற்சியை வழங்கும் ஒவ்வொரு இல்லத்தையும், இயேசுவை வரவேற்று, வழிநடத்தி, வாழவைத்த நாசரேத்து குடும்பமாக கற்பனை செய்துபார்க்க விழைகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணித்துவ பயிற்சியை வழங்கும் ஒவ்வொரு இல்லத்தையும், இயேசுவை வரவேற்று, வழிநடத்தி, வாழவைத்த நாசரேத்து குடும்பமாக கற்பனை செய்துபார்க்க விழைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோரையும் அவர்களை உருவாக்குவோரையும் சந்தித்த வேளையில் கூறினார்.

திருத்தந்தை 11ம் பயஸ் பாப்பிறை அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களையும், அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள், மற்றும், பொறுப்பாளர்களை, ஜூன் 10, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, மனித வடிவில் விளங்கிய தன் பெற்றோரால் வழிநடத்தப்படுவதற்கு, தன்னையே வழங்கிய இயேசுவைப் பின்பற்ற, இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.

பொறுப்பாளர்கள், புனித யோசேப்பைப் பின்பற்ற...

இளையோரை வழிநடத்தும் ஆசிரியர்களும், பொறுப்பாளர்களும், புனித யோசேப்பின் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் வகுப்பறையில் சொல்லித்தருவதைக் காட்டிலும், தங்கள் வாழ்வால், அவர்கள், இளையோருக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புனித யோசேப்பினாலும், அன்னை மரியாவாலும் வழிநடத்தப்பட தன்னையே வழங்கிய இயேசுவின் எடுத்துக்காட்டை, அருள்பணித்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோர் பின்பற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள், நாசரேத்து இயேசுவைப் பின்பற்ற...

பயிற்சி பெறும் காலத்தில், சமுதாய ஊடகங்களின் பயன்பாட்டிலும், ஏனைய தொடர்புக் கருவிகளின் பயன்பாட்டிலும் திறமை பெற்றிருப்பதோடு திருப்தி அடையாமல், இறைவன் மனிதருக்கு வழங்கிய மாபெரும் தொடர்பான இறைவாக்கினால் புதுப்பிக்கப்பட்டு, அதை மற்றவருக்கும் வழங்கும் கலையை கற்றுக்கொள்வது மிக முக்கியம் என்று, திருத்தந்தை, வலியுறுத்திக் கூறினார்.

அருள்பணித்துவ பயிற்சி இல்லம், இளையோரை உலகினின்று தனிமைப்படுத்தாமல், அதன் உண்மை நிலையைப் புரிந்துகொண்டவர்களாய், இறைவனுக்கும், மனிதருக்கும் நெருக்கமானவர்களாக அவர்களை உருவாக்கவேண்டும் என்று, திருத்தந்தை, இளையோரிடம் எடுத்துரைத்தார்.

மனிதம், ஆன்மீகம், அறிவுத்திறன், மேய்ப்புப்பணித்துவத் திறமை

இளையோர் ஒவ்வொருவரும் தங்கள் பயிற்சிக்காலத்தில், மனிதம், ஆன்மீகம், அறிவுத்திறன், மேய்ப்புப்பணித்துவத் திறமை என்ற நான்கு பரிமாணங்களிலும் வளர்ச்சிபெற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார்.

தான், தனது கலாச்சாரம் என்று குறுகிவிடாமல், தங்களினின்று வேறுபட்ட அனைவரையும் வரவேற்று, அவர்களுடன் இணைந்து வாழவும், இணைந்து பயணிக்கவும், இளையோர், இக்காலத்தில், அதிகமாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரையோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 13:58