ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முதல் தலைவர் Robert Schuman (1886-1963) ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முதல் தலைவர் Robert Schuman (1886-1963) 

15 பேரின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்கள் ஏற்பு

பிரான்ஸ் நாட்டு இறை ஊழியர், Robert Schuman ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் மற்றும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முதல் தலைவர் .

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான பிரான்ஸ் நாட்டு Robert Schuman அவர்களின் மறைசாட்சிய வாழ்வு, இரண்டாம் உலகப்போர்  முடிவுற்ற சமயத்தில் சோவியத் படைகளால் போலந்தில் கொல்லப்பட்ட பத்து அருள்சகோதரிகளின் மறைசாட்சியம் உட்பட 15 பேரின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன

புனிதர், மற்றும், அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், ஜூன் 19, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, இந்த 15 பேர் குறித்த விவரங்களைச் சமர்ப்பித்தார். 

இவர்களில் நால்வர் இறைஊழியர்கள் எனவும், 1945ம் ஆண்டில் போலந்தில் மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்ட, புனித எலிசபெத் அருள்சகோதரிகள் சபையின் பத்து அருள்சகோதரிகள் உட்பட 11 பேர் அருளாளர்கள் எனவும் அறிவிக்கப்படுவார்கள்.

ஜெர்மனியில் 1642ம் ஆண்டில் பிறந்து, 1704ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, இயேசு சபை அருள்பணி இறை ஊழியர் Giovanni Filippo Jeningen அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை ஒன்றிற்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

இறை ஊழியர்கள்

காதுகேளாதோர் இறைபராமரிப்பு பிள்ளைகள் சபையை நிறுவிய, இத்தாலிய அருள்பணியாளர் Severino Fabriani (7 சன.1792-27 ஆக.1849); அமலமரி இதயத்தின் சிறிய அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவரும், இரஷ்யாவில் பிறந்து போலந்தில் இறைபதம் சேர்ந்த Angela Rosa Godecka (13 செப்.1861-13 அக்.1937); வியாகுல அன்னை சிறிய அருள்சகோதரிகள் சபையின், இத்தாலியரான அருள்சகோதரி Orsola Donati (22 அக்.1849-8 ஏப்.1935); அமல மரி அருள்சகோதரிகள் சபையின், இஸ்பானியரான Maria Stella di Gesù (12 ஏப்.1899-24 நவ.1982); லக்சம்பர்கில் பிறந்து, பிரான்ஸ் நாட்டில் இறையடி சேர்ந்த Robert Schuman (29 ஜூன் 1886-4 செப்.1963) ஆகியோரின் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை திருத்தந்தை அங்கீரித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2021, 14:55