சமுதாய அளவில் புறக்கணிப்பட்டோர் நாள் (கோப்புப்படம் 2016-11-1) சமுதாய அளவில் புறக்கணிப்பட்டோர் நாள் (கோப்புப்படம் 2016-11-1)  

வயதுமுதிர்ந்தோர் அவமதிப்பு விழிப்புணர்வு உலக நாள்

மருத்துவத்தில் வாழ்வைப் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், அனைவரின் மனித உரிமைகள் மற்றும், மாண்பை மதிப்பதாய் இருக்கவேண்டும் - கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வயது முதிர்ந்தோர் மதிக்கப்படாத இடத்தில், இளையோருக்கு வருங்காலம் கிடையாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 15, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்தியொன்றை பதிவுசெய்துள்ளார்.

வயதுமுதிர்ந்தோர் அவமதிப்பு விழிப்புணர்வு உலக நாள், ஜூன் 15, இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டதை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, சமுதாயத்தில் வயது முதிர்ந்தோரின் உரிமைகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2011ம் ஆண்டில், வயதுமுதிர்ந்தோர் அவமதிப்பு விழிப்புணர்வு உலக நாளை அங்கீகரித்தது. நீதி கிடைக்க வழிசெய்தல் என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று, இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஐ.நா. பொதுச்செயலர்

மேலும், இந்த உலக நாளையொட்டி காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கொரோனா பெருந்தொற்றால் அனைத்து வயதினரும் தாக்கப்பட்டாலும், இந்நோயால் 80 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்பு விகிதம் ஐந்து மடங்காக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பெருந்தொற்று, வயதுமுதிர்ந்தோர் மத்தியில் வார்த்தையால் சொல்லமுடியாத அச்சத்தையும், துன்பங்களையும் உருவாக்கியுள்ளது என்றும், வறுமை, பாகுபாடு, தனிமை போன்றவற்றை, இவர்கள், குறிப்பாக, வளரும் நாடுகளில் அதிகம் எதிர்கொள்கின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

மற்ற மனிதர்களைப் போலவே, வயதானவர்களும், வாழ்வு மற்றும், நலவாழ்வு சார்ந்த உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர் என்றும், மருத்துவத்தில் வாழ்வைப் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், அனைவரின் மனித உரிமைகள் மற்றும், மாண்பை மதிப்பதாய் இருக்கவேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வயது முதிர்ந்தோரில் 73 விழுக்காட்டினர் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் அறுபது வயதுக்கு மேற்பட்டோரில் 16 விழுக்காட்டினர் அவமதிக்கப்படுகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், அறுபதும், அதற்கு மேற்பட்ட வயதுள்ளோரில் பத்தில் ஒருவர், அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2021, 14:57