புனித நார்பர்ட் புனித நார்பர்ட் 

அமைதியின் தூதராக, திருத்தூதுப் போதகராக - புனித நார்பர்ட்

புனித நார்பர்ட் அவர்கள், கடுமையான துறவு வாழ்வையும், ஏழைகளையும் திருப்பயணிகளையும் உபசரிப்பதையும், தன் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக வைத்திருந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் Prémontré எனுமிடத்தில் அமைக்கப்பட்ட துறவுமடத்தில் துவக்கப்பட்ட நார்பட்டைன் துறவு சபையின் 900மாம் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் இத்துறவுச் சபையினர், நற்செய்தியால் வழிநடத்தப்பட்டவர்களாக, இறைவனுக்கும் தங்கள் சகோதரர், சகோதரிகளுக்கும் செவிமடுப்பவர்களாக செயல்படவேண்டும் என, தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் திருநற்கருணையின் தூதராகவும், சோர்வற்ற போதகராகவும், தன்னை நாடுபவர்களுக்கு உதவுபவராகவும் செயல்பட்ட இத்துறவுச் சபையின் நிறுவனர், புனித நார்பர்ட் அவர்களின் குணநலன்களை, அச்செய்தியில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

ஜெர்மனியில் 1075ம் ஆண்டு பிறந்து, உலக வாழ்வின் வழிகளைக் கைவிட்டு, புனித அகுஸ்தினாரின் சட்டவிதிகளைப் பின்பற்றி, புனித நார்பர்ட் துவக்கிய சபை,  கடந்த 9 நூற்றாண்டுகளாக, தான் துவக்கப்பட்ட நோக்கத்தில் பிறழாமல், தியானத்திலும், நற்செய்தியை எடுத்துரைப்பதிலும் விசுவாசமாக இருந்து செயல்படுகிறது என, நார்பட்டைன் சபையின் தற்போதைய தலைமைத் துறவி, அருள்பணி Jozef Wouters அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், பாராட்டியுள்ளார்.

அமைதியின் தூதராகச் செயல்பட்ட புனித நார்பர்ட், திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுசுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப்பின், அப்போஸ்தலிக்க போதகராகவும் செயல்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலிலும், நற்செய்தி எடுத்துரைப்பவர்களின் வார்த்தைகளுக்கும் வாழ்வு நடவடிக்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டியதன் அவசியத்தை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

1121ம் ஆண்டில், தன்னைப் பின்பற்றியோருடன் முதல் இல்லத்தை துவக்கிய புனித நார்பர்ட் அவர்கள், கடுமையான துறவு வாழ்வை மேற்கொள்ள உதவியது மட்டுமல்ல, ஏழைகளையும் திருப்பயணிகளையும் உபசரிப்பதையும், அத்துறவு வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக வைத்திருந்தார் என கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருநற்கருணையிலிருந்து தனக்குத் தேவையான பலத்தைப் பெற்ற புனித நார்பர்ட், இன்றைய அருள்பணியாளர்களுக்கும் துறவறத்தாருக்கும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக உள்ளார் என மேலும் தன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2021, 14:23