இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினர் சந்திப்பு இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினர் சந்திப்பு  

இளையோரின் நல்வாழ்வுக்காகச் செலவிடும் நேரம் வீணானது அல்ல

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினர், சிறியோரின் பாதை, நற்செய்தியின் பாதை, படைப்பாற்றலின் பாதை ஆகிய மூன்று பாதைகளில் பயணிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் பிறரன்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அமைப்பை, "திருஅவையின் உயிருள்ள ஒரு பகுதி" என்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்களால், அந்த அமைப்பினரை வாழ்த்தினார்,.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூன் 26, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த அந்த அமைப்பினருக்கு உரையாற்றிய திருத்தந்தை, ஐம்பதாம் ஆண்டு நிறைவு என்பது, ஒரு மைல்கல் எனக் கூறியதோடு, சிறியோரின் பாதை, நற்செய்தியின் பாதை, படைப்பாற்றலின் பாதை ஆகிய மூன்று பாதைகளில், இந்த அமைப்பு தொடர்ந்து பயணிக்கவேண்டும் என தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

சிறியோரின் பாதை

சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற, மற்றும், பாதுகாப்பற்ற சிறியோரிடமிருந்து, முதலில் நம் பயணத்தைத் துவக்கவேண்டும் எனவும், பிறரன்பு என்பது, இரக்கம் காட்டுவதாகும் எனவும், இரக்கம் காட்டுதல் என்பது, மக்களை அடக்கிஒடுக்கும் அடிமைத்தனத்தினின்று அவர்களை விடுவிக்கும்பொருட்டு, கடும் துன்பநிலைகளில் வாழ்கின்ற அவர்களைத் தேடிச்சென்று பணியாற்றுவதே என விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள், இந்த இரக்கச் செயல்களை ஆற்றுவதற்கு, தலத்திருஅவைகளுக்கு உதவியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் பாதை பற்றியும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியின் பாதை

நற்செய்தியின் பாதை என்பது, பலனை எதிர்பார்க்காமல், அன்பை நன்கொடையாக வழங்குவதாகும் என்றும், தம்மையே பணியாளராகத் தாழ்த்திய இயேசுவைப் பின்பற்றி ஆற்றப்படும் பிறரன்பு, முழுமனிதரின் தேவைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

வறியோர் ஒவ்வொருவரிலும் இயேசு பிரசன்னமாகி இருக்கிறார் என்ற உணர்வு, தன்னையே முன்னிலைப்படுத்தும் சோதனையிலிருந்து நம்மை விடுவிக்கும் என்றும், வறியோர் மீது, திருஅவை, கனிவும், நெருக்கமும் உள்ளதாகச் செயல்படவும் உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்தகையப் பண்புகளைக்கொண்ட திருஅவையில், ஏழைகள் பேறுபெற்றவராக இருப்பார்கள், அத்திருஅவையில், மறைப்பணி மையம்கொண்டதாக இருக்கும், அங்கு தொண்டாற்றுவதிலிருந்து மகிழ்ச்சி பிறக்கும் என்றுரைத்த திருத்தந்தை, படைப்பாற்றல் பாதை பற்றியும் விளக்கினார். 

படைப்பாற்றல் பாதை

படைப்பாற்றல் பாதை குறித்து விளக்கிய திருத்தந்தை, புதிதாக ஏழைகளாக மாறுகின்றவர்களின் எண்ணிக்கையும், வறுமைநிலையும் அதிகரித்து வருவது குறித்து சோர்வடையாமல், உடன்பிறந்தநிலையின் கனவுகளைத் தொடர்ந்து உருவாக்கி, நம்பிக்கையின் அடையாளங்களாக வாழுமாறு, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார்.

காரித்தாஸ் உறுப்பினர்களுக்கு நன்றி

இந்த பெருந்தொற்று காலத்தில், தனிமை, துன்பம் மற்றும், தேவையில் இருக்கும் பலருக்கு உதவும் உங்களின் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றுரைத்து, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பில் பணியாற்றும் அனைவருக்கும், குறிப்பாக தன்னார்வல இளையோருக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாறிவரும் இக்காலச் சூழல்களில் இளையோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும், வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றும் இவர்களுக்கு உதவும்போது, காரித்தாஸ் அமைப்பே இளமையுள்ளதாக, படைப்பாற்றல் உள்ளதாக மாறுகிறது எனவும், இவர்கள் வாழ்வை வளப்படுத்த அர்ப்பணிக்கும் நேரம், ஒருபோதும் வீணானது அல்ல எனவும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது என்று புனித பவுலடிகளார் கூறியிருப்பதுபோன்று, இந்த பேரன்பால் நீங்களும் ஆட்கொள்ளப்படவேண்டும் என காரித்தாஸ் உறுப்பினர்களை வாழ்த்தி, தன் செபங்களையும் ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் உணர்வில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் தூண்டுதலால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு, மறைமாவட்ட அளவில், 218 கிளை அமைப்புகளைக் கொண்டிருக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 15:00