திருச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் சவரிமுத்து ஆரோக்யராஜ் திருச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் சவரிமுத்து ஆரோக்யராஜ் 

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப்பின் திருச்சிக்கு புதிய ஆயர்

திருச்சி புனித பவுல் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் அதிபர், அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ், திருச்சியின் புதிய ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1954ம் ஆண்டு பிறந்து, திருச்சி மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்களை, அம்மறைமாவட்டத்தின் ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 29, செவ்வாயன்று நியமித்துள்ளார்.

திருச்சி மறைமாவட்டத்தின் லாலாபேட்டை என்ற ஊரில் 1954ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பிறந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்கள், பெங்களூருவிலும், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசிலும் கல்வி பயின்றுள்ளார்.

1981ம் ஆண்டு சனவரி 8ம் தேதி அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், சில பங்குத்தளங்களிலும், தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டு பணிக்குழுவின் செயலராகவும், திருச்சி புனித பவுல் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பணி ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து, ஆயரின்றி இருந்த அம்மறைமாவட்டத்திற்கு, அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்கள் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

புனித மரியா பேராலயம், திருச்சி
புனித மரியா பேராலயம், திருச்சி
29 June 2021, 15:43