மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் (SICA) இலச்சனை பொறித்த கொடி மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் (SICA) இலச்சனை பொறித்த கொடி 

மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு - திருத்தந்தையின் காணொளிச்செய்தி

மக்கள், புலம்பெயரும் கட்டாயங்களைத் தடுத்து நிறுத்த, சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் முயற்சிகளும், மனித வர்த்தகத்தை அடியோடு ஒழிக்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் சந்தித்து வரும் பெருந்தொற்றின் நெருக்கடி, நம்மிடையே கூட்டுறவு முயற்சிகள் தேவை என்பதை, முன்னெப்போதும் இல்லாத அளவு உணர்த்திவருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 10, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள ஒரு காணொளிச்செய்தியில் கூறியுள்ளார்.

மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டி, கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) நடைபெறும் கூட்டுறவு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன் மனம்கனிந்த வாழ்த்துக்களைக் கூறி, திருத்தந்தை, இக்காணொளிச்செய்தியை அனுப்பியுள்ளார்.

குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன

பெருந்தொற்றில் பயணித்த நீண்ட மாதங்களில், மத்திய அமெரிக்கப் பகுதி, தன் சமுதாய, கலாச்சார தளங்களில் பின்னடைவைக் கண்டுள்ளது என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பின்னடைவால், சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கவலையை வெளியிட்டார்.

தங்கும் வீடு, குடும்பம், ஊர் சமுதாயம் என்ற பல வழிகளிலும் தங்கள் வேர்களை இழந்துவிட்ட மக்கள், வன்முறை கும்பல், போதைப்பொருள் வியாபார கும்பல், பாலியல் தொழிலை வளர்க்கும் கும்பல் என்ற பல கும்பல்களிடம் அடிமைகளாகும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்கப் பகுதியின் விருந்தோம்பல்

மத்திய அமெரிக்கப் பகுதியில், பொதுவாக, அந்நியரை வரவேற்கும் பண்பு வேரூன்றியிருந்தாலும், இந்தப் பெருந்தொற்றின் ஆபத்தினால், ஒவ்வொரு நாடும் தன் எல்லைகளை மூடவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதனால், சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்தோர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

இத்தகைய ஒரு சூழலில், புலம்பெயரும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள மனிதர்களுக்கு, பாதுகாப்பும், அடிப்படைத் தேவைகளின் நிறைவும் உறுதி செய்யப்படவேண்டும் என்று திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.

மக்கள், புலம்பெயரும் கட்டாயங்களைத் தடுத்து நிறுத்த, சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் முயற்சிகளும், மனித வர்த்தகத்தை அடியோடு ஒழிக்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று தன் காணொளிச்செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விப் பிரச்சனையை உருவாக்கியுள்ள பெருந்தொற்று

முன்னெப்போதும் இல்லாத அளவு கல்விப் பிரச்சனையை, இந்தப் பெருந்தொற்று உருவாக்கியுள்ளது என்பதை, தனிப்பட்ட முறையில் எடுத்துரைக்கும் திருத்தந்தை, வருங்காலத் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, பன்னாட்டளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க மக்கள் இதுவரை சந்தித்து வந்துள்ள பல்வேறு பிரச்சனைகளில் உடன் பயணித்த திருஅவை, இப்போது, மீண்டும் ஒருமுறை மக்களுடன் பயணித்து, அவர்களில் நம்பிக்கையை வளர்க்க முயலும் என்பதை, ஓர் உறுதிமொழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 14:05