புனித லூயீஜி கல்லூரி மாணவர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித லூயீஜி கல்லூரி மாணவர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித லூயீஜி கல்லூரி மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை

நற்செய்தியின் ஒளியில் வாழும் அருள்பணியாளர், தன்னைச் சுற்றியிருப்போர் இறைவனைச் சுவைக்கவும், நம்பிக்கையில் வளரவும் உதவுகிறார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தான் என்ற நிலையை உறுதி செய்வது, அடுத்தவர் மீது அக்கறையற்றிருப்பது ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் இன்றைய சமுதாயத்தில், குழுமமாக வாழும் நீங்கள் பல்வேறு தினசரி சவால்களை சந்திக்கிறீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவ பயிற்சிபெறும் மாணவர்களிடம் கூறினார்.

உரோம் நகரில் இயங்கிவரும் பிரான்ஸ் நாட்டு புனித லூயீஜி கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை, ஜூன் 7, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, குழும வாழ்வில் உள்ள சவால்களைக் குறித்து, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

புனித யோசேப்பை மையப்படுத்திச் சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வாண்டில், இறை நம்பிக்கையுடன் வாழ்ந்த அம்மனிதரிடம், மென்மையான உள்ளம்கொண்ட குடும்பத்தலைவர், கடவுளின் திட்டத்திற்கு தன்னையே முழுமையாகக் கையளித்த மனிதர் என்ற பண்புகளைப் பயிலமுயல்வோம் என்று கூறினார்.

குழும வாழ்வில், தனித்திருக்கவும், மற்றவர்களை ஒதுக்கி வாழும் சிறு  குழுக்களை உருவாக்கவும் சோதனைகள் எழுவது இயற்கை என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சோதனைகளை வென்று, உறவிலும், உண்மையான இறைவேண்டல் நிறைந்த வாழ்விலும் வளரும் குழுமத்தை உருவாக்கும்போது, சுதந்திரக் காற்றை நம்மால் சுவாசிக்கமுடியும் என்று கூறினார்.

நற்செய்தியின் ஒளியில் வாழும் அருள்பணியாளர், தன்னைச் சுற்றியிருப்போர் இறைவனைச் சுவைக்கவும், நம்பிக்கையில் வளரவும் உதவுகிறார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, புனித லூயீஜி கல்லூரியில் பயிலும் அனைவரும் அத்தகைய அருள்பணியாளர்களாக, தங்களையே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பரந்துவிரிந்த தொடுவானத்தையும், திருஅவையைக் குறித்த உன்னத கனவுகளையும் வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரையும் தான் கேட்டுக்கொள்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வு, நகைச்சுவை உணர்வு ஆகிய பண்புகளையும் அவர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கூறினார்.

அருள்பணித்துவ பயிற்சியில் இருப்போர் அனைவரும், அனைத்திற்கும் மேலாக, நன்றி நிறைந்த உள்ளத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் நடுவே, நம்பிக்கையின் ஒளியை அவ்ர்கள் ஏந்திச்செல்வது அவசியம் என்பதையும் நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2021, 14:16