தொழிலாளரான புனித யோசேப்பு  (Gerrit Van Honthorst, 1630) தொழிலாளரான புனித யோசேப்பு (Gerrit Van Honthorst, 1630) 

மனிதரான கடவுளே, தொழிலை வெறுத்து ஒதுக்கவில்லை

1955ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், திருஅவையில், தொழிலாளரான புனித யோசேப்பு திருநாளை உருவாக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாள், அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதம் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், இரு செய்திகளை பதிவுசெய்துள்ளார்.

“மனிதரான கடவுளே, தொழிலை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதை, தொழிலாளரான புனித யோசேப்பு நமக்கு நினைவுபடுத்துகிறார். எந்த ஓர் இளையோரும், எந்த ஒரு மனிதரும், எந்த ஒரு குடும்பமும், வேலையின்றி இருக்கக்கூடாது என்பதை நாம் உறுதியுடன் சொல்வதற்குரிய வழிகளைக் காண, புனித யோசேப்பிடம் மன்றாடுவோம்!” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், தொழிலாளரான புனித யோசேப்பு (#SaintJosephTheWorker) என்ற ஹாஷ்டாக்குடன் இடம்பெற்றிருந்தன.   

கொரோனா கிருமி அழிய செபமாலை

திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நம் ஆறுதலும், உறுதியான நம்பிக்கையுமாகிய இறைவனின் அன்னை நோக்கி, இந்த மே மாதத்தில், நம் கண்களை உயர்த்துவோம். இந்த சோதனை காலத்தில், மேலும் மேலும் ஒன்றிணைந்த ஆன்மீகக் குடும்பமாக, நாம் ஒன்றுசேர்ந்து செபமாலை செபிப்போம்” என்ற வார்த்தைகள், ஒன்றுசேர்ந்து செபிப்போம் (#LetUsPrayTogether) என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியிருந்தன.   

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில், இந்த மே மாதத்தில், ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் (http://www.vatican.va/special/rosary/index_rosary.htm) வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் உலகத் தொழிலாளர் நாள் மே மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1955ம் ஆண்டில், திருஅவையில், தொழிலாளரான புனித யோசேப்பு திருநாளை உருவாக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2021, 15:13