"இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சனை "இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சனை 

புனித இக்னேசியசுடன் இணைந்து பயணம் மேற்கொள்ள...

"பாம்பலோனாவில் புனித இக்னேசியஸ் காயமுற்றதன் 500ம் ஆண்டு நிறைவில், திருப்பயணியான இக்னேசியசுடன் இணைந்து பயணம் மேற்கொள்ள ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்" - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஸ்பெயின் நாட்டின் பாம்பலோனா கோட்டையைக் காக்க, இளம் வீரர் இக்னேசியஸ், போரில் ஈடுபட்டிருந்த வேளையில், 1521ம் ஆண்டு, மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்ததால், அந்நிகழ்வின் 500ம் ஆண்டு, மே 20, இவ்வியாழன் முதல், உலகெங்கும் வாழும் இயேசு சபையினரால் சிறப்பிக்கப்படுகிறது.

இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், "பாம்பலோனாவில் புனித இக்னேசியஸ் காயமுற்றதன் 500ம் ஆண்டு நிறைவில், திருப்பயணியான இக்னேசியசுடன் இணைந்து பயணம் மேற்கொள்ள ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். இதனால், நாம் மறுமலர்ச்சி பெற்று, அனைத்தையும், கிறிஸ்துவில் புதிதாகக் காண்போமாக" என்ற சொற்கள், இடம்பெற்றிருந்தன.

மேலும், மே 16, கடந்த ஞாயிறன்று துவங்கிய Laudato Sí வாரத்தையொட்டி, கடந்த நான்கு நாள்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வந்த டுவிட்டர் செய்திகளையடுத்து, மே 20, இவ்வியாழனன்று, தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்காக இன்று இறைவேண்டல் செய்வோம். அத்துடன், இந்தப் பூமிக்கோளம் அனைவருக்கும் உரிய இல்லமாக விளங்க, அனைவரும் இணைந்து, தொடர்ந்து உழைப்போம்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பதிவுசெய்தார்.

மே 20, இவ்வியாழனன்று துவங்கும் "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டு, 14 மாதங்கள் நடைபெற்று, 2022ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவுபெறும்.

மே 23, பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, இணையத்தளம் வழியே, உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்களும் கலந்துகொள்ளும் ஒரு செப நிகழ்வு, "இக்னேசியஸ் 500" ஆண்டின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்று, இந்த சிறப்பு ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் இயேசு சபை இளவல், Pascal Calu அவர்கள் கூறியுள்ளார்.

இச்சிறப்பு ஆண்டின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, 2022ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, இக்னேசியஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருபெரும் இயேசு சபையினர், புனிதர்களாக உயர்த்தப்பட்டதன் 400ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2021, 14:27