புலம்பெயர்ந்தோர் பணிகளாற்றும் அருள்சகோதரி நோர்மா புலம்பெயர்ந்தோர் பணிகளாற்றும் அருள்சகோதரி நோர்மா  

சகோ.நோர்மாவின் புலம்பெயர்ந்தோர் பணிகளுக்கு திருத்தந்தை பாராட்டு

வரவேற்றல், உடனிருத்தல், பாதுகாத்தல், சமுதாயத்தோடு ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு அம்சங்கள், புலம்பெயரும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழைவதற்காக, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு உதவிவரும், அமெரிக்க அருள்சகோதரி Norma Pimentel அவர்களுக்கு, தன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கே, மெக்சிகோ நாட்டு எல்லையில் அமைந்துள்ள Rio Grande பள்ளத்தாக்கில், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள் ஆற்றிவரும் பணிகள் குறித்து, அருள்சகோதரி நோர்மா அவர்கள், இம்மாதம் 3ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த மடலுக்கு, மே 28, இவ்வெள்ளி மாலையில், காணொளிச் செய்தி வழியாகப் பதில் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லதொரு வாழ்க்கையைத் தேடிவருகின்ற மக்கள், மற்றும், உண்மையாகவே, சமுதாய நரகங்களாக இருக்கும் சூழலிலிருந்து தப்பித்துவரும் மக்களை வரவேற்று ஆதரவளிக்கும், அருள்சகோதரி நோர்மா அவர்களுக்கும், அவர்கள் தலைமையில் பணியாற்றும் குழுவுக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தோர்

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்கள் மாண்புடன் வாழ இக்குழுவினர் ஆற்றிவரும் பணிகளுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, வரவேற்றல், உடனிருத்தல், பாதுகாத்தல், சமுதாயத்தோடு ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு அம்சங்களை மையப்படுத்தி, புலம்பெயர்ந்தோர் குறித்த  தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தான் வத்திக்கானில் இருந்துகொண்டே, இறைவேண்டல் வழியாக, அருள்சகோதரி நோர்மா மற்றும், அவர்களது குழுவினரோடு உடன்பயணிப்பதாக, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும், அக்குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயேசுவின் மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி நோர்மா அவர்கள், Rio Grande Valleyல் பணியாற்றும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களின் செயல்திட்ட இயக்குனராவார். 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை 23 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு இந்த அமைப்புகள் உதவியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2021, 14:44