வத்திக்கான் கெபியில் திருத்தந்தை செபமாலை செபிக்கிறார் வத்திக்கான் கெபியில் திருத்தந்தை செபமாலை செபிக்கிறார் 

பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என செபமாலை

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில், மே 1, இச்சனிக்கிழமையன்று துவங்கி, மே மாதம் முழுவதும் நடைபெறும் உலகளாவிய செபமாலை பக்தி முயற்சியை, திருத்தந்தை துவக்கி வைக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மத்தியில் வாழ்வதற்கு, இயேசுவின் உதவி மிகவும் அவசியம் என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“என்னால் இந்த பிரச்சனையோடு வாழ முடியவில்லையே என்ற கவலை, நம்மை மிக மோசமாக வாட்டுகிறது. எனவே நமக்கு இயேசுவின் உதவி தேவை. அதனால், இவ்வாறு நாம் அவரிடம் சொல்வோம். இயேசுவே, நீர் என் அருகில் இருக்கிறீர், மற்றும், எனக்குச் செவிசாய்க்கிறீர் என நம்புகிறேன். எனது துயரங்களை உம்மிடம் கொண்டுவருகிறேன். எனக்கு உம்மீது நம்பிக்கை உள்ளது. என்னை உம்மிடம் கையளிக்கிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

செபமாலை பக்தி முயற்சி

மேலும், உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும்வேளை, மே மாதத்தின் முதல் நாளான இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பக்தி முயற்சியை துவக்கி வைக்கிறார்.

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, இச்சனிக்கிழமையன்று துவக்கிவைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை நிறைவு செய்துவைப்பார்.

ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், உட்பட, உலகின் அனைத்து கண்டங்களின் முப்பது திருத்தலங்களில், இந்த பக்தி முயற்சி நடைபெறும்.

அன்னை மரியாவுக்காகவும், செபமாலைக்கெனவும் அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், இந்த பெருந்தொற்றை இறைவன் முடிவுக்குக் கொணரவேண்டும் என்ற சிறப்பு வேண்டுதலுடன், அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி, இந்த முயற்சி, உலகெங்கிலும் உள்ள திருத்தலங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2021, 16:18