Chemin Neuf குழுமத்தினர் சந்திப்பு Chemin Neuf குழுமத்தினர் சந்திப்பு 

உடன்பிறந்த உணர்வுப் பாதையில் தொடர்ந்து நடங்கள்

Chemin Neuf குழுமம், துணிவு, திடமனது, மற்றும், ஆர்வத்தோடு, ஏழைகள் மத்தியில், ஆற்றும் பணிகளை ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மற்றவர் மீதுள்ள அச்சத்தில் பல தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுகொண்டிருக்கும் ஓர் உலகில், மக்களுக்கு இடையே பாலங்களைக் கட்டுமாறும், உடன்பிறந்த உணர்வுப் பாதையில் துணிச்சலோடு நடக்குமாறும், பன்னாட்டு அமைப்பு ஒன்றிடம், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், தன்னை சந்திக்க வந்திருந்த, "Chemin Neuf" அதாவது “புதிய வழி நோக்கிய பயணம்” எனப்படும், ஒரு பன்னாட்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் 41 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர், தங்களது பணிகள் வழியாக, திருஅவை ஏழைகளோடு ஏழைகளாய் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று பாராட்டிப் பேசினார்.

நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தின் நலம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் இக்காலக்கட்டத்தில், எக்காலத்தையும்விட இக்காலத்தில், இளையோர் மிகுந்த சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் மாண்பு, மதிப்பு, படைப்பாற்றல், பொதுநலனை ஊக்குவிக்கும் திறமை ஆகியவற்றை  ஏற்கின்ற, ஓர் உண்மையான சூழலியல் மனமாற்றம் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

நாம் அனைவரும் ஒரே படகில் பயணிக்கிறோம் என்றும், அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு இணங்கினால் மட்டுமே, இன்னல்களை நீக்க முடியும் என்றும், கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர் தற்போது உரோம் நகரில் சில நாள்கள் கூட்டம் நடத்துவதன் நோக்கம் பற்றியும் விவரித்தார்.

புலம்பெயர்ந்தோர், மற்றும், ஐரோப்பாவில் அவர்கள் ஏற்கப்படும் முறை போன்ற, பொதுவான நம் இல்லமாகிய இந்த பூமிக்கோளம் எதிர்கொள்ளும் சில குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து, இந்த அமைப்பினர் சிந்தித்து வருகின்றனர் என்றும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் பற்றி நாம் பேசுகையில் பலநேரங்களில், எண்ணிக்கையை மட்டும் பேசுவதோடு நிறுத்தி விடுகிறோம், உண்மையில், அந்த விவகாரம், எண்ணிக்கை பற்றியதல்ல, மாறாக, மக்கள் பற்றியது என்றும் கூறினார். 

பொதுநிலையினர், முதலில் குடும்பத்தில், பின்னர், சமுதாயத்தில், மற்றும், அரசியலில் பிறரன்புப் பணிகள் ஆற்ற, அழைப்பு விடுக்கப்படுகின்றனர் என்றும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில், அமைதி, நல்லிணக்கம், நீதி, மனித உரிமைகள், இரக்கம் போன்ற பண்புகள் வளர, நற்செய்திப் பணியாற்றி, புதியதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, அவர்கள் அழைப்பு விடுக்கப்படுகின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த "Chemin Neuf" என்ற அமைப்பினர், தங்களின் உறுதிப்பாடுகள், மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாயிருக்கவும், கிறிஸ்து வாழ்கிறார், துணிவோடு அவரைப் பின்செல்ல அழைக்கிறார் என்பதை மறவாமல் இருக்கவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனச்சோர்வு, கவலை, ஏமாற்றம் போன்றவற்றோடு வாழ்கின்ற இளையோரின் இதயங்களில், இயேசுவோடு இணைந்து, நம்பிக்கைச் சுடரை ஏற்றுமாறு, அந்த அமைப்பினரிடம் கூறினார்.

இயேசு சபை அருள்பணி Laurent Fabre என்பவரால், 1973ம் ஆண்டில், ஓர் அருங்கொடை குழுவாக ஆரம்பிக்கப்பட்ட, Chemin Neuf குழுமத்தில், தற்போது, 26 நாடுகளில், 12 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுமத்தில், கத்தோலிக்கர், ஆங்கலிக்கன் சபையினர், சீர்திருத்த சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், என, பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த, அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும், பொதுநிலையினர் உறுப்பினர்களாக உள்ளனர். 2009ம் ஆண்டில், இது, திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாறியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2021, 16:09