திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்திகளில் ஒன்று - கோப்புப் படம் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்திகளில் ஒன்று - கோப்புப் படம் 

இறைவன் நம்மைக் குறித்து ஒருபோதும் மனம் தளர்வதில்லை

கிறிஸ்தவனாக இருப்பது என்பது, திருஅவைக் கோட்பாடோ, அல்லது அறநெறி சார்ந்த கருத்தியலோ அல்ல, மாறாக, உயிர்த்த இயேசுவுடன் வாழும் உறவைக் கொண்டிருப்பதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறையன்பின் அழகை அறியாமலும், இறைவனை வாழ்வின் மையமாக வரவேற்காமலும், பாவத்தை வெற்றிகொள்ள முடியாமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் அருகில் இறைவன் இருக்கிறார் என தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் இதயத்திற்கு அருகாமையில் நம்மை வைத்திருக்கும் இறைவன், நாம் அவரின் அன்பின் அழகை அறியாதிருந்தாலும், அவரை நம் வாழ்வின் மையமாக வரவேற்காதிருந்தாலும், நம் பாவங்களை வெற்றிகொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், நம்மைக் குறித்து ஒருபோதும் மனம் தளர்வதில்லையென, ஏப்ரல் 19, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்தவனாக இருப்பது என்பது, திருஅவைக் கோட்பாடோ, அல்லது அறநெறி சார்ந்த கருத்தியலோ அல்ல, மாறாக, உயிர்த்த இயேசுவுடன் வாழும் உறவைக் கொண்டிருப்பதாகும், என இஞ்ஞாயிறு வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் தன் 100வது ஆண்டை சிறப்பிப்பதைக் குறித்து பாராட்டுக்களை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில், இளையோரில் வருங்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பதில் அது வெற்றியடைவதாக என தெரிவித்துள்ளார்.

மேலும், ஞாயிறன்று வெளியிட்ட தன் மூன்றாவது டுவிட்டரில், உக்ரைன் நாட்டு மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பதட்ட நிலைகள் முடிவுக்குவந்து, அங்கு, ஒப்புரவும் அமைதியும் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2021, 14:12