நல்லாயன் ஞாயிறு திருப்பலி - 250421 நல்லாயன் ஞாயிறு திருப்பலி - 250421 

கிறிஸ்துவின் திருஅவையை கட்டியெழுப்புவதில் அருள்பணியாளர்

அருள்பணியாளர்கள், தாங்கள் மகிழ்வுடன் பெற்றுள்ள இறைவார்த்தையை மற்றவர்களுக்கு வழங்குவதோடு, தாங்கள் கற்பிப்பதை தங்கள் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதிய ஏற்பாட்டின் ஒரே தலைமைக்குருவான நமதாண்டவராம் இயேசு, இறைமக்கள் அனைவரையும் இறைக்குருத்துவ மக்களாக தனக்குள் இணைத்துக் கொண்டுள்ளபோதிலும், அவர்களுக்குள்ளும், ஆயராகவும், அருள்பணியாளராகவும், போதகராகவும் தன் தனிப்பட்ட பணியை தொடர்ந்து நடத்த அருள்பணியாளர்களை தெரிந்துகொண்டார் என, இஞ்ஞாயிறன்று, திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாக திருப்பொழிவுச் செய்த திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்டத்திற்கென்று, ஒன்பது புதிய அருள்பணியாளர்களை, ஏப்ரல் 25, நல்லாயன் ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பொழிவு செய்த திருப்பலியில் மறையுரையாற்றிய உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தை அனுப்பியதுபோல், தன் சீடர்களையும், அதன்பின் ஆயர்களையும், அவர்களின் உதவியாளர்களாக அருள்பணியாளர்களையும் இயேசு அனுப்பிவைக்கிறார் என்றார்.

கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த எண்ணிக்கையில் விசுவாசிகள் பங்குகொண்ட இத்திருப்பலியில், கிறிஸ்துவின் மறையுடலாக இருக்கும் திருஅவையினை கட்டியெழுப்புவதில் அருள்பணியாளர்களின் பணி பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் இறைமக்களுக்கு பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இவர்கள் நற்செய்தியின் போதகர்களாகவும், இறைமக்களின் மேய்ப்பர்களாகவும், வழிபாடுகளில், குறிப்பாக, ஆண்டவரின் தியாகப்பலி கொண்டாட்டங்களில் தலைமைத் தாங்குபவராகவும் செயல்படுவார்களென, புதிதாக திருப்பொழிவுச் செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் பற்றி குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய அருள்பணியாளர்கள், தாங்கள் மகிழ்வுடன் பெற்றுள்ள இறைவார்த்தையை மற்றவர்களுக்கு வழங்குவதோடு, தாங்கள் கற்பிப்பதை தங்கள் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டுமென்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் வழியாக இவர்களின் போதனை மற்றவர்களுக்கு ஊட்டச்சத்தாகச் செயல்படுவதுடன், இறைவனின் இல்லத்தை கட்டியெழுப்ப உதவுவதாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

தங்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இறைமகனின் மரணம் மற்றும் உயிர்ப்பின் மறையுண்மையை பகிர்வதன் வழியாக, புதிய வாழ்வின் தன்மையோடு இறைவனோடு நடந்து செல்லவேண்டுமென்ற அழைப்பையும், புதிய அருள்பணியாளர்களுக்கு முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்கு வழங்குவதன் வழியாக திருஅவைக்கு புதிய அங்கத்தினர்களைக் கொணரும் அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளம் வழியாக மன்னிப்பை வழங்குகின்றனர், புனித எண்ணெய் வழியாக நோயாளிகளின் துயரை நீக்க உதவுதல், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக இடம்பெறும் இறைவேண்டல், மற்றும் விண்ணப்பங்கள் வழியாக இறைமக்கள், மற்றும் உலகமக்களனைவரின் குரலாக செயல்படுகின்றனர் அருள்பணியாளர்கள், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களுக்காக அல்ல, மாறாக, கிறிஸ்துவுக்காக, இயேசுவின் குருத்துவப் பணியை உண்மையான பிறரன்புடன் நிறைவேற்றுங்கள் என புதிய அருள்பணியாளர்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணாமல்போன தன் ஆட்டை, தேடிவந்த இயேசு, பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே வந்தார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தார்.

பல்வேறு மறைமாவட்ட அருள்பணித்துவ பயிற்சி மையங்களில் பயின்று, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்திற்கென புதிய அருள்பணியாளர்களாக திருத்தந்தையால் திருப்பொழிவுச் செய்யப்பட்டுள்ள இந்த ஒன்பது பேரில், ஒருவர் ருமேனியா நாட்டையும், மற்றொருவர் கொலம்பியா நாட்டையும், இன்னொருவர் பிரேசில் நாட்டையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2021, 12:00