2021 வசந்தகால மெய்நிகர் கூட்டத்தைப் பற்றிய அறிவிப்பு 2021 வசந்தகால மெய்நிகர் கூட்டத்தைப் பற்றிய அறிவிப்பு 

உலக வங்கியின் பன்னாட்டு கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

ஒவ்வொரு நாட்டின் அரசும், தன் மக்களின் வருங்காலத்தை உறுதிசெய்யும் திட்டங்களை வகுத்துவரும் இவ்வேளையில், செல்வம் மிகுந்த நாடுகள், வறுமைப்பட்ட நாடுகளைக் குறித்து அக்கறை கொள்ளவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக வங்கியும், பன்னாட்டு நாணய நிதி அமைப்பும் இணைந்து, ஏப்ரல் 5ம் தேதி முதல் 11ம் தேதி முடிய மேற்கொண்டுவரும் வசந்தகால கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கணணி வழி நடைபெறும் இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொள்ளும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழியே, தன் செய்தியை அனுப்புவதாக, திருத்தந்தை, இச்செய்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, சமுதாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல் ஆகிய அனைத்து தளங்களிலும், பல ஆபத்தான விளைவுகளை நாம் சந்தித்துள்ளோம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நடைபெறும் இக்கூட்டம், இந்தப் பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் ஒரு வழியைக் காட்டும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

மனித குடும்பத்தில் அனைவரும் சமமான நிலையில் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நம்பிவந்தபோதிலும், பல சகோதரர்களும், சகோதரிகளும், சமுதாயத்தின் விளிம்புகளுக்கு, குறிப்பாக, பொருளாதார உலகின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம் என்பதை, திருத்தந்தை தன் மடலில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நாம் யாருமே தனிப்பட்ட முறையில் காக்கப்படப்போவதில்லை என்பதை இந்தப் பெருந்தொற்று உணர்த்தியுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனை மனதில்கொண்டு, வருங்கால பொருளாதாரத் திட்டங்களை அறிஞர்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாட்டின் அரசும், தன் மக்களின் வருங்காலத்தை உறுதிசெய்யும் திட்டங்களை வகுத்துவரும் இவ்வேளையில், செல்வம் மிகுந்த நாடுகள், தங்கள் நாட்டு மக்களையும், எல்லைகளையும் தாண்டி, வறுமைப்பட்ட நாடுகளைக் குறித்து அக்கறை கொண்டு அவர்களையும் தங்கள் திட்டங்களின் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை, இம்மடலில் விண்ணப்பித்துள்ளார்.

பொருளாதாரத் திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் வேளையில், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதை நினைவுறுத்தும் திருத்தந்தையின் மடல், மறுசுழற்சி செய்யப்படக்கூடிய சக்தியை பயன்படுத்தும் வழிமுறைகள், இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

நமது வர்த்தகமும், பொருளாதாரமும், தனக்குத் தானே விதிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, அவை, மனிதம், நன்னெறி, மதம் ஆகிய வேறுபல உயர்ந்த தளங்கள் வழங்கும் விதிமுறைகளுக்கு செவிமடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடல் வழியே வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2021, 14:27