அவிலா நகர் புனித தெரேசா அவிலா நகர் புனித தெரேசா 

செபமே, அவிலா நகர் புனித தெரேசாவை ஓர் அசாதாரண பெண்ணாக....

எல்லாம் கடந்துவிடும், மாறிவிடும். கடவுள் ஒருவரே மாறாதவர். பொறுமை அனைத்தையும் வெல்லும் - அவிலா நகர் புனித தெரேசா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அவிலா நகர் புனித தெரேசா, திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, "ஓர் அசாதாரண பெண்"  என்ற தலைப்பில், அவிலா நகரில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் பங்குகொண்டவர்களிடம், ஒரு காணொளி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலே, அப்புனிதரை, ஓர் அசாதாரண பெண்ணாக ஆக்கியது என்று கூறியுள்ளார்.

அவிலா நகர் புனித தெரேசா, பல்வேறு வழிகளில் தனிச்சிறப்புமிக்கவராக விளங்கினார், எனினும், இறைவேண்டல் வழியாக ஆண்டவரோடுள்ள ஒன்றிப்பில் உறுதியாக நிலைத்திருப்பது, ஆண்டவரால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை உறுதியுடன் ஆற்றுவது, ஆண்டவரோடு சந்திப்பு நடத்துவது, தான் எடுத்த முடிவு, மற்றும் தீர்மானத்தில் நிலைத்து நிற்கத் துணிவது, ஆகியவை, அவருக்கு மிக முக்கியமானவைகளாக இருந்தன என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு சீர்திருத்தவாதியாக, புனித தெரேசா, வெளிப்படுத்திய துணிச்சல், படைப்பாற்றல், மற்றும், தனிச்சிறப்பு ஆகியவை, ஆண்டவரோடு அவர் கொண்டிருந்த உள்ளார்ந்த ஒன்றிப்பே என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

புனிதர்களின் தனித்துவங்கள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், உலகளாவிய புனிதத்துவதற்கு விடுத்துள்ள அழைப்பு, சில மறைவல்லுனர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பாகும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, புனிதர்களின் தனித்துவங்களை எடுத்துரைத்துள்ளார்.

புனித தெரேசா போன்ற இறையுணர்வுபெற்ற ஞானிகள், கிறிஸ்துவோடுள்ள ஒன்றிப்பை, நாம் திருமுழுக்கில் பெற்ற திருவருளால், சிறப்பான முறையில் அனுபவித்தவர்கள் என்று, அக்காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, தூய வாழ்வு வாழ்வதற்கு, புனிதர்கள் நமக்குத் தூண்டுதலாக உள்ளனர் என்று கூறியுள்ளார். 

புனிதத்துவத்தை மற்றவரிடமிருந்து நகலெடுக்க முடியாதது, ஏனெனில் அது, ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் வகுத்துள்ள தனித்துவமிக்க, மற்றும், மாறுபட்ட பாதையிலிருந்து விலகிச்செல்ல வைக்கக்கூடும் என்று கூறியுள்ள திருத்தந்தை, புனிதத்துவதற்கும், ஆண்டவரோடு சந்திப்பு நடத்துவதற்கும், ஒவ்வொரு நம்பிக்கையாளரும், தனது வழியை தெளிந்துதேர்வு செய்யவேண்டியது முக்கியம் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.  

இறைவேண்டல் என்பது, அசாதாரணப் பொருள்களை அனுபவிப்பது அல்ல, மாறாக, அது கிறிஸ்துவோடு ஒன்றிணைய வைப்பது, அந்த ஒன்றிப்பு உண்மையானதாக இருந்தால் அது, பிறரன்புப் பணிகளில் வெளிப்படும் என்று, புனித தெரேசாவே, தன் அருள்சகோதரிகளிடம் கூறியிருக்கிறார் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கடவுளின் பிரமாணிக்கமுள்ள நண்பர்கள்

நாம் வாழ்ந்து வருகின்ற கடினமான காலக்கட்டத்திற்கு, கடவுளின் பிரமாணிக்கமுள்ள நண்பர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், கடவுள் மேன்மைமிக்கவர், அவர் நல்லவர், எல்லைகளைக் கடந்தவர், அவர் நம்மை அன்புகூர்கிறார் என்பதை சுவைக்க, அவரது கரங்களினின்று வரலாறு தப்பமுடியாது என்பதை உணர, இறைவேண்டல் நம் இதயத்தைத் திறக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

நாம் மாபெரும் செயல்கள் ஆற்றத் தூண்டப்படலாம், ஏனெனில் நாம் ஆண்டவரது சலுகை பெற்றவர்கள், அவரோடு இணைந்து எந்தச் சவாலையும் நம்மால் எதிர்கொள்ள இயலும் என்றும், உண்மையில், நம் இதயம் அவரது உடனிருப்பையே விரும்புகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

அவிலா நகர் புனித தெரேசாவின் இறைவேண்டலோடு திருத்தந்தை தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

அவிலா நகர் புனித தெரேசாவின் இறைவேண்டல்

எதுவும் உன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்.

எதுவும் உனக்கு அச்சம் தரவேண்டாம்.

எல்லாம் கடந்துவிடும், மாறிவிடும்.

கடவுள் ஒருவரே மாறாதவர்.

பொறுமை அனைத்தையும் வெல்லும்.

உன்னிடம் கடவுள் இருந்தால் உனக்குக் குறையொன்றும் இல்லை.

கடவுளே நம் நிறைவு - இன்றும் என்றும்!'

1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், அவிலா நகர் புனித தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார். இஸ்பெயின் நாட்டின், அவிலா நகரின் புனித தெரேசா கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில், ஏப்ரல் 12, இத்திங்களன்று துவங்கிய நான்கு நாள் பன்னாட்டு மெய்நிகர் கருத்தரங்கு, ஏப்ரல் 15, இவ்வியாழனன்று நிறைவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2021, 13:09