பாரகுவாய் நாட்டில் இளையோர் மேற்கொண்டுள்ள போராட்டம் பாரகுவாய் நாட்டில் இளையோர் மேற்கொண்டுள்ள போராட்டம் 

தவக்காலம், பாரகுவாய், மியான்மார் - டுவிட்டர் செய்திகள்

"தூய ஆவியாரின் கரங்களால் எழுதப்படுவதற்கு விருப்பப்படும், திறந்ததொரு நூலாக நாம் இருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் அவர் தனித்துவமான படைப்புக்களை உருவாக்குகிறார்."

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தின் பல்வேறு பரிமாணங்களை தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 18, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தவக்காலம், எதிர்நோக்கைப் பெற்றுக்கொள்ளும் காலம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

"சிலுவையில் தன் உயிரை வழங்கி, மூன்றாம் நாள் இறைவனால் உயிர்ப்பைப் பெற்ற கிறிஸ்துவின் எதிர்நோக்கை அடைவதே, தவக்காலத்தின் எதிர்நோக்கை உணர்வதாகும். இவ்வழியில், நாம் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நாம் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறோம் (1 பேதுரு 3:15)" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், இப்புதனன்று தான் வழங்கிய மறைக்கல்வி உரையிலிருந்து ஒரு கருத்தையும், மறைக்கல்வியின் இறுதியில், பாரகுவாய், மியான்மார் ஆகிய இரு நாடுகளைக் குறித்து திருத்தந்தை வெளியிட்ட விண்ணப்பங்களையும் பதிவுசெய்த மூன்று டுவிட்டர் செய்திகள், மார்ச் 17 புதனன்று வெளியாயின.

நம் இறைவேண்டல் வாழ்வில் தூய ஆவியார் கொண்டிருக்கும் பங்கைக் குறித்து மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரால் எழுதப்படும் ஒரு நூலாக நம்மை உருவகித்து, இப்புதனன்று தன் முதல் டுவிட்டர் செய்தியை பதிவு செய்தார்.

"திருஅவையின், மற்றும் இவ்வுலகின் வரலாற்றை தூய ஆவியார் எழுதுகிறார். அவரது கரங்களால் எழுதப்படுவதற்கு விருப்பப்படும், திறந்ததொரு நூலாக நாம் இருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் அவர் தனித்துவமான படைப்புக்களை உருவாக்குகிறார். நாம் வேறு யாரைப்போலவும் இல்லாத தனித்துவம் கொண்டவர்கள்" என்ற சொற்கள், இப்புதனன்று வெளியான முதல் டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

பாரகுவாய், மியான்மார் ஆகிய நாடுகளில் அமைதி நிலவவேண்டி, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் விண்ணப்பங்களை வெளியிட்ட திருத்தந்தை, அந்த விண்ணப்பங்களை, இப்புதனன்று வெளியான 2வது, மற்றும் 3வது டுவிட்டர் செய்திகளில் பதிவு செய்திருந்தார்.

Caacupé புதுமைகளின் அன்னையாம் மரியாவின் பரிந்துரையால், பாரகுவாய் நாட்டில், உரையாடல் வழியே நல்ல முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று செபிப்பதாகவும், வன்முறையினால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 2வது செய்தியில் குறிப்பிட்டார்.

“மியான்மார் நாட்டிற்கு நம்பிக்கை தரும் எண்ணத்துடன், அங்கு போராடிவரும் பல இளையோர், தங்கள் உயிரை இழந்து வருவது குறித்து பெரும் வேதனையடைகிறேன். 'வன்முறையை நிறுத்துங்கள்' 'உரையாடலை மேற்கொள்ளுங்கள்' என்ற வேண்டுதலுடன்,  நானும், மியான்மார் தெருக்களில் மண்டியிடுகிறேன்” என்ற சொற்கள் திருத்தந்தையின் 3வது செய்தியாக வெளிவந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2021, 14:13