ஞாயிறு மூவேளை செபவுரையின்போது - 140321 ஞாயிறு மூவேளை செபவுரையின்போது - 140321 

சிரியாவின் பத்தாண்டு மோதல்கள் முடிவுக்கு வர அழைப்பு

திருத்தந்தை : சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும், நல்மன அடையாளத்தை வெளியிட்டு, மக்களில் நம்பிக்கை பிறக்க உதவவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -வத்திக்கான் செய்திகள்

மத்தியக் கிழக்குப் பகுதியின் சிரியா நாட்டில், மக்களின் துன்பங்களுக்குக் காரணமான பத்தாண்டுகால மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 14, இஞ்ஞாயிறன்று நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப்பின் இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார்.

2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அரசுத்தலைவர் Bashar al-Assad அவர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள், மற்றும், அது கொடுமையான முறையில் அடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில், கடந்த பத்தாண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் காலத்தில் மனிதகுல பேரழிவைக் கொண்டுவந்துள்ளவைகளில் சிரியா உள்நாட்டு மோதலும் குறிப்பிடும்படியானது என கவலையை வெளியிட்டார்.

வெளியில் சொல்லப்படாத எண்ணிக்கையில் இறப்புகளும், காயமடைதல்களும், பல இலட்சக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சமடைதல், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளது, அழிவுகள், பலவித வன்முறைகள், அனைத்து மக்களும், குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், முதியோர் என பெருமெண்ணிக்கையில் மக்கள் துயர்களை அனுபவித்தல் என, இப்பத்தாண்டு மோதல்கள், வேதனைகளைக் கொணர்ந்துள்ளன என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும், நல்மன அடையாளத்தை வெளியிட்டு, மக்களில் நம்பிக்கை பிறக்க உதவவேண்டும் என இதயத்தின் ஆழத்திலிருந்து விண்ணப்பிப்பதாக மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

சிரியா தன்னை மீண்டும் கட்டியெழுப்ப, அனைத்துலக சமுதாயம் உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமனைவரும் நம் ஒருமைப்பாட்டின் வழியாக, அந்நாடு, நம்பிக்கையில் உயிர்பெற்றெழ உதவுவோம் என, அழைப்பு விடுத்தார்.

கடந்த பத்தாண்டுகளாக உள்நாட்டு மோதல்களை சந்தித்துவரும் சிரியா நாட்டில், 50 இலட்சத்திற்கு மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், ஏறக்குறைய 60 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவராகளாக உள்ளனர், ஏறக்குறைய 1 கோடியே முப்பத்து நான்கு இலட்சம் பேருக்கு பல்வேறு வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2021, 13:11