திருத்தந்தையின் நேர்முகம் தாங்கிய புத்தகம் திருத்தந்தையின் நேர்முகம் தாங்கிய புத்தகம்  

வருங்காலத்திற்குரிய நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு வாய்ப்பு

திருத்தந்தை : மக்களிடையே நிலவும் சரிநிகரற்ற பாகுபாடுகளைக் களையவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்கவும், உறுதிப்பாடுகளை எடுக்க இது சரியான நேரம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -வத்திக்கான் செய்திகள்

மனித குலமனைத்தையும் மனதில் கொண்டதாக, வருங்காலத்திற்குரிய நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு, தகுந்ததொரு வாய்ப்பை, இந்தக் கொரோனா பெருந்தொற்று நமக்கு தந்துள்ளது என உரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட் பெருந்தொற்று நோய் உருவாக்கியுள்ள பல்வேறு பாதிப்புக்கள் குறித்தும், அதிலிருந்து வெளிவரும் வழிகள் குறித்தும் La Stampa என்ற இத்தாலிய நாளிதழில் பணியாற்றும் தொமெனிக்கோ அகாசோ என்பவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தையுடன் எழுத்தாளர் அகாசோ நடத்திய நீண்ட உரையாடல், 'இறைவனும் வரவிருக்கும் உலகும்' என்ற தலைப்பில், ஒரு நூலாக, மார்ச் 16, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட உள்ளது.

தொலைநோக்குடன் சில முடிவுகளை எடுக்க, அசாதாரண சுழல்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கின்றன என, அந்த நேர்காணலில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடையே நிலவும் சரிநிகரற்ற பாகுபாடுகளைக் களையவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்கவும் உறுதிப்பாடுகளை எடுக்க இது சரியான நேரம் என வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களும், உலகை பசுமையாக்கும் இலக்கை நோக்கி திருப்பி விடப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தன் நேர்காணலில் முன்வைத்துள்ள திருத்தந்தை, எந்த ஒரு தீர்மானமும், பொதுநலன் குறித்த நம் அக்கறையையும், இறைவனின் படைப்பு குறித்த நம் கடமையையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், தொலைநோக்குடனும் செயல்பட்டு, பாகுபாடுகள், ஊழல், குற்றங்களுக்கு துணைபோதல் போன்றவைகளை அகற்றவேண்டியது, அரசு நிர்வாகத்தில் இருக்கும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் விடப்படும் ஓர் அழைப்பு எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாய அநீதிகளையும், மக்களை ஒதுக்கிவைக்கும் நிலைகளையும் கைவிட்டு, மனித உடன்பிறந்த உணர்வுடன் வருங்காலத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகின் அனைத்து மக்களுக்கும் நல பராமரிப்புக்களை உறுதிசெய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ள இன்றையச் சூழலை சரியாகக் கைப்பற்றி, ஒன்றிணைந்த உணர்வுடன் உழைப்போமானால், நம்மால் மீண்டும் எழுந்து வரமுடியும் என தன் நேர்காணலில் நம்பிக்கையை விதைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களைக் காப்பாற்றவும், அவர்களை முன்னேற்றவும் பயன்படவேண்டிய ஒரு நாட்டு வருமானத்தின் பெரும்பகுதி, ஆயுத தயாரிப்புக்களில் செலவிடப்படுவது குறித்தும் கவலையை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதம் தாங்கிய வன்முறை, ஏழ்மை, அக்கறையற்றவகையில் இயற்கையை சுரண்டல் என்ற தீய சக்கர சுழற்சி இடம்பெற்றுக்கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது, எனவும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகளை, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து அணுகும்போது, பாகுபாட்டு நிலைகள், ஆயுத உதவியுடன் களைய முனைதல், தேசிய வாத குறுகிய கண்ணோட்டம், தனிமைப்படுத்தல், அரசியல் சுயநலம் போன்றவைகளை தூர விலக்கி வைக்கவேண்டும் எனவும் விண்ணப்பிக்கும் திருத்தந்தை, இன்றைய உலக பொருளாதார வீழ்ச்சியால், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய பெருந்தொற்று உருவாக்கியுள்ள துயரமானச் சூழலில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு, அவர்களில் கல்வியை விதைக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளையோர், தங்கள் நம்பிக்கையை, எச்சூழலிலும் இழந்துவிடாமல், பெரும் கனவுகளுடன், அறிவு, பாசம், மற்றும் பிறரன்பின் மனிதர்களாக தொடர்ந்து நடைபோடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2021, 11:18