திருக்குடும்பத்தின் பாதுகாவவரான புனித யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவவரான புனித யோசேப்பு 

விண்ணகத் தந்தை நம்பிக்கையுடன் தெரிவுசெய்த புனிதர்

புனித யோசேப்பைப்போல ஞானத்தில் வளரவும், அவரைப்போல, இறைவனின் திட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்படுத்தவும், அப்புனிதரின் பரிந்துரையை நாடுவோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் மகனைக் காத்து வளர்ப்பார் என்று, விண்ணகத் தந்தை, நம்பிக்கையுடன் தெரிவுசெய்த மாபெரும் புனிதர், யோசேப்பு என்றும், அவரது திருநாளை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கவிருக்கிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 17, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தார்.

புனித யோசேப்பைப் போல வாழ...

புனித யோசேப்பைப் போல ஞானத்தில் நாம் வளரவும், அவரைப்போல, இறைவனின் திட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்படுத்தவும், நற்செய்தியின் விழுமியங்களை வாழ்வில் கடைபிடிக்கவும், அப்புனிதரின் பரிந்துரையை நாடுவோம் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். அந்த அறிவிப்பின் 150ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று, புனித யோசேப்பு ஆண்டை அறிவித்தார்.

150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே டிசம்பர் 8ம் தேதியன்று, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்று பொருள்படும், “Patris corde” என்ற தலைப்பில், திருத்தூது மடல் ஒன்றையும் வெளியிட்டார்.

2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று துவங்கிய புனித யோசேப்பு யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நிறைவடையும்.

"அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு"

மார்ச் 19, இவ்வெள்ளியன்று, புனித கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்படுவதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, அதே நாளில், "அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) குடும்ப ஆண்டு" ஆரம்பமாகும் என்பதையும் நினைவுகூர்ந்தார்.

'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, வத்திக்கானில், கணணி வலைத்தளம் வழியே, மெய்நிகர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டை" துவக்கிவைப்பார் என்றும், மார்ச் 19ம் தேதி, வெள்ளியன்று துவங்கும் இந்த சிறப்பு ஆண்டு, 2022ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2021, 11:30