திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம்: 2வது நாள் நிகழ்வுகள்

பேறுபெற்றவர்களாக இருப்பதற்கு, அவ்வப்போது சாகசங்கள் புரிபவர்களாக மாறவேண்டிய அவசியம் இல்லை, மாறாக, ஒவ்வொரு நாளும் சாட்சிகளாக வாழவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, மற்றும், மனிதகுல உடன்பிறந்த உணர்வின் திருப்பயணியாக வருகிறேன் என்று சொல்லி, மார்ச் 05, இவ்வெள்ளியன்று, தனது 33வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாக, மத்திய கிழக்கு நாடாகிய, ஈராக்கிற்குப் புறப்பட்டார். அன்று, ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயண களைப்பையும் பொருட்படுத்தாது பயண நிகழ்வுகளை, உடனடியாகத் துவக்கினார். இரண்டாவது நாளான இச்சனிக்கிழமையன்று, ஈராக்கின் ஷியா இஸ்லாம் பிரிவின் ஆன்மீக, மற்றும், அரசியல் தலைநகரமான நஜாஃப்பில், அந்த பிரிவின் தலைவர் Grand Ayatollah Ali al-Sistani அவர்களைச் சந்தித்து, மனிதகுலத்தின் அமைதிக்கு மதங்களின் முக்கியத்துவத்தை திருத்தந்தை வலியுறுத்தினார். அந்த சந்திப்பிற்குப்பின், நசிரியா நகர் (Nassiriya) சென்று, அங்கிருந்து, விவிலியத் தந்தை ஆபிரகாம் அவர்களின் பிறப்பிடமான கல்தேயர்களின் ஊர் (Ur) என்ற நகர் சென்று, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் பிரதிநிதிகளோடு பல்சமய வழிபாடு ஒன்றில் கலந்துகொண்டார் திருத்தந்தை. கடவுள் பரிவுநிறைந்தவர் என்பதையும், நமது சகோதரர்கள், சகோதரிகளை வெறுப்பதால், நாம் அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறோம் என்பதையும், நமது தந்தை ஆபிரகாமின் நாட்டில், நாம் வலியுறுத்துகிறோம் என்று திருத்தந்தை கூறினார். பல்சமய வழிபாட்டிற்குப் பின்னர், அங்கிருந்து பாக்தாத் நகருக்குவந்து, உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, புனித யோசேப்பு கல்தேய பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். அராபிய மொழியில் பாடல்கள் பாடப்பட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் தொன்மையான, மற்றும், ஆடம்பர கல்தேய வழிபாட்டுமுறை திருவழிபாட்டை முதன்முதலில் நிறைவேற்றினார்.

புனித யோசேப்பு கல்தேய பேராலயம்
புனித யோசேப்பு கல்தேய பேராலயம்

இத்திருவழிபாட்டில், பேறுபெற்றவர்களை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார். இத்திருவழிபாட்டின் இறுதியில், கல்தேயர்களின் பபிலோனியாவின் முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். மனிதக் குடும்பத்தின் ஒன்றிப்பு, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதிலும், கொரோனா பெருந்தொற்று, வறுமை, புலம்பெயர்வு, தீவிரவாதம், பயங்கரவாதம், சூழலியல் மாசுகேடு போன்றவை உருவாக்கியிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்வதிலும், எம்மையும், ஒரே குடும்பமாக நோக்க வைக்கின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் திருத்தந்தையிடம் எடுத்தியம்பினார். இத்திருப்பலியே, திருத்தந்தையின், ஈராக் திருத்தூதுப்பயணத்தின் இரண்டாவது நாள் நிகழ்வுகளில் கடைசியாக இடம்பெற்றதாகும். இந்நாளில் திருத்தந்தை, விமானப் பயணங்களை கூடுதலாக மேற்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2021, 14:53