திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருஅவையின் தலைமைப் பணியில் 8 ஆண்டுகள்

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்காவிலிருந்தும், இயேசு சபையிலிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 13, இச்சனிக்கிழமையன்று, தனது பாப்பிறை தலைமைப் பணியில் எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த ஆண்டுகளில் கத்தோலிக்கர், திருஅவையை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று, இந்திய தலத்திருஅவை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மும்பையில், ஊடகத்துறையில் ஆலோசகராகப் பணியாற்றும், இயேசு சபை அருள்பணி Myron Pereira அவர்கள், “ஒரு தொலைதூர நாட்டிலிருந்து வந்துள்ள ஒரு மனிதரிடமிருந்து, அடுத்து வரப்போவது என்ன?” என்ற தலைப்பில், யூக்கா செய்தியிடம் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டிலிருந்து, திருஅவையின் தலைமைப் பணிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகம் முழுவதும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தவேளையில், அவர் தன்னோடு நற்செய்தியின் மகிழ்வைக் கொண்டுவந்தார் என்று, அருள்பணி Myron Pereira அவர்கள் கூறினார்.

எட்டு ஆண்டுகளின் சாதனை

கடந்த எட்டு ஆண்டுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாதித்திருப்பது என்ன என்று கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், அவர், நாம் திருஅவையை நோக்கும் முறையை முழுவதுமாக மாற்றியுள்ளார் என்றும், அவரது முதல் நற்செய்தியின் வார்த்தைகள், கோட்பாடுகள் பற்றியோ, சட்டங்கள் பற்றியோ அல்ல, மாறாக, அவை கடவுளின் பரிவன்பு, மற்றும், இரக்கம் பற்றியதாக இருந்தன என்றும், அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.

நம் பதிலுரையும், நம் அனைத்து சகோதரர், மற்றும், சகோதரிகளுக்கு, குறிப்பாக, ஏழைகள், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்வோர், புலம்பெயர்ந்தோர், வீடற்றோர், மற்றும், நோயாளிகளுக்கு, பரிவன்பைக் காட்டுவதாக அமையவேண்டும் என்றும், இப்பண்பை, திருத்தந்தை, பொதுப்படையாகவும், தவறாமலும் செயல்படுத்தி வருகிறார் என்றும், அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.   

நம் கிறிஸ்தவ நம்பிக்கையை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைவிட, எவ்வாறு அதை வாழ்கிறோம் என்பதில், திருத்தந்தை மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் என்றும், இந்த விடயத்தில், திருஅவையில் திறந்தமனதுடன் கலந்துரையாடல், மற்றும், விவாதங்கள் நடைபெறவும் ஊக்கப்படுத்தி வருகிறார் என்றும், அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.  

அருள்பணித்துவ கலாச்சாரத்தில் மாற்றத்தைக் கொணர முயற்சி, புதிய விழுமியங்களோடு புதிய உலகை அமைக்க முயற்சி, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிக்க நடவடிக்கை, கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல், மற்றும், மனிதகுல உடன்பிறந்தநிலையை ஊக்குவிக்க நடவடிக்கை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சி உட்பட பல்வேறு துறைகளில் திருத்தந்தை ஈடுபட்டு வருகிறார் என்று, அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.

திருஅவையின் வரலாற்றில் முதன் முறையாக, தனக்கு ஆலோசனை வழங்க, ஒன்பது பேர் கொண்ட கர்தினால்கள் அவையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ளார் என்றும், மும்பை இயேசு சபை அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.

84 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அமெரிக்காவிலிருந்தும், இயேசு சபையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். Jorge Mario Bergoglio என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1936ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2021, 15:27