திருநீற்றுப் புதன் திருப்பலி  திருநீற்றுப் புதன் திருப்பலி  

புனித பேதுரு பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன் திருப்பலி

பிப்ரவரி 17ம் தேதியன்று துவங்கும் தவக்காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நாளில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுவார். அன்று திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை இடம்பெறாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“மிகவும் வலுவற்ற மக்களை மறக்கவேண்டாம், மற்றும், மிகவும் வறிய மக்களைப் பாதிக்கின்ற, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கு குறிப்பிட்ட கவனம் கொடுக்கவேண்டும் என்று, மனித உடன்பிறந்த நிலை உணர்வில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். எவருமே ஒதுக்கப்பட்டுவிடாதபடி, தேவையான சிகிச்சைகளை ஊக்குவிப்போம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 06, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

திருநீற்றுப் புதன்

மேலும், திருநீற்றுப் புதனான, இம்மாதம் 17ம் தேதி, உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருநீறை ஆசீர்வதித்து, திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

தவக்காலத்தின் தொடக்கமாக அமைந்துள்ள திருநீற்றுப் புதனன்று, திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலே விசுவாசிகள் பங்குபெறுவார்கள் என்றும், திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை, திருநீற்றுப் புதன் திருப்பலியை, காலையில் நிறைவேற்றுவதை முன்னிட்டு, புதன்கிழமைகளில் வழக்கமாக இடம்பெறும் திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை, அன்றைய நாளில் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தவக்கால தியான உரைகள்

மேலும், பாப்பிறை இல்ல மறையுரையாளரான, கப்புச்சின் சபையின் கர்தினால் Raniero Cantalamessa அவர்கள், 2021ம் ஆண்டு தவக்கால தியான உரைகளை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில், “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” (மத்.16,15) என்ற தலைப்பில் வழங்குவார் என்று, பாப்பிறை இல்ல அலுவலகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் நடைபெறும் இந்த தவக்கால தியான உரைகள், பிப்ரவரி 26, மார்ச் 5,12, 26 ஆகிய தேதிகளில், உரோம் நேரம் காலை 9 மணிக்கு நடைபெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2021, 15:44